முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காமன்வெல்த்தில் இந்திய வீரர்கள் அசத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 8 ஏப்ரல் 2018      விளையாட்டு
Image Unavailable

துப்பாக்கி சுடுதலில் மனு பகேருக்கு தங்கம்
ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன. மகளிருக்கான 10 மீ ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் மனு பகேர் தங்கப் பதக்கமும், ஹீனா சித்து வெள்ளிப் பதக்கமும் வென்று அசத்தினர்.

பளு தூக்குதல்: பூனம் யாதவுக்கு தங்கம்
ஆடவருக்கான 85 கிலோ பளு தூக்குதல் போட்டியில் இந்தியாவின் வெங்கட் ராகுல் ரகாலா தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.  இதனால் இந்தியாவின் தங்க பதக்க எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.
இந்த நிலையில், காமன்வெல்த் பளு தூக்குதல் போட்டியின் மகளிர் பிரிவில் 69 கிலே எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை பூனம் யாதவ் தங்க பதக்கம் வென்றுள்ளார்.

ரவி குமார், விகாஸ் தாகூருக்கு வெண்கலம்
ஆண்களுக்கான 10 மீ ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் ரவி குமார் வெண்கலம் வென்றார். 94 கிலோ பிரிவினருக்கான பளுதூக்குதலில் விகாஸ் தாகூரும் வெண்கலம் வென்று அசத்தினார்.

கலப்பு அணி பிரிவு இறுதியில் இந்தியா
காமன்வெல்த் போட்டியில் நேற்று நடைபெற்ற பேட்மிண்டன் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா அரையிறுதியில் சிங்கப்பூரை எதிர்கொண்டது. முதல் போட்டியில் இந்திய ஜோடியான சாத்விக் ராங்கிரெட்டி - அஸ்வின் பொன்னப்பா சிங்கப்பூரின் யோங் காய் டெர்ரி ஹீ - ஜியா யிங் கிரிஸ்டல் வோங் ஜோடி எதிர்கொண்டது. இதில் இந்திய ஜோடி 22-20, 21-18 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றது.

2-வது போட்டியில் ஸ்ரீகாந்த் கிதாம்பி கீவ் யேவ் லோவை எதிர்கொண்டார். இதில் ஸ்ரீகாந்த் கிதாம்பி 21-17, 21-14 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார். 3-வது ஆட்டத்தில் சாத்விக் ராங்கிரெட்டி - சிராக் சந்திரசேகர் ஷெட்டி ஜோடி யோங் காய் டெர்ரி ஹீ - டேனி பாவா கிறிஸ்னந்தா ஜோடியை எதிர்கொண்டது. இதில் முதல் செட்டை இந்திய ஜோடி 21-17 எனக் கைப்பற்றியது. ஆனால் அடுத்த இரண்டு செட்டுகளை  முறையே 19-21, 12-21 என இழந்து தோல்வியடைந்தது.

இதனால் மூன்று ஆட்டங்கள் முடிவில் இந்தியா 2-1 என முன்னிலைப் பெற்றிருந்தது. 4-வது ஆட்டத்தில் சாய்னா நேவால் ஜியா மின் யேவோவை எதிர்கொண்டார். இதில் சாய்னா நேவால் 21-8, 21-15 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதனால் இந்தியா 3-1 என சிங்கப்பூரை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதன்மூலம் தங்கம் அல்லது வெள்ளி பதக்கத்தை உறுதி செய்துள்ளது.

குத்துச்சண்டை: மேரிகோமுக்கு பதக்கம் உறுதி
5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம் நேற்று நடந்த கால்இறுதியில் 5-0 என்ற கணக்கில் ஸ்காட்லாந்து வீராங்கனையை வீழ்த்தினார். இதன்மூலம், அரைஇறுதி போட்டிக்கு மேரி கோம் தகுதிப்பெற்றுள்ளதால் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் இதில் ஏதாவது ஒன்றை இந்தியாவுக்கு உறுதி செய்துள்ளார்.

மேல்-சபை எம்.பி.யான மேரிகோம் அரை இறுதியில் 11-ம் தேதி இலங்கை வீராங்கனை அனுஷ்கா தில்ருஷ்சியை சந்திக்கிறார். இதேபோல இந்திய குத்துச்சண்டை வீரர் விகாஷ் கிருஷ்ணா, கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து