தீர்ப்பு இரு தரப்பினருக்கும் திருப்தி அளிக்கும் வகையில் இருக்க வேண்டும். இதற்கு சமரச மையம் உதவியாக இருக்கும் : மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.நம்பிராஜன் பேச்சு

திங்கட்கிழமை, 9 ஏப்ரல் 2018      கரூர்
karur

கரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சமரச மையம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட முதன்மை நீதிபதி மாண்பமை எஸ்.நம்பிராஜன் தலைமையில் மாவட்ட கலெக்டர் த.அன்பழகன், முன்னிலையில் நேற்று (09.04.2018) நடைபெற்றது.

நீதிபதி பேச்சு

இந்நிகழ்ச்சியில், மாண்பமை முதன்மை நீதிபதி தெரிவித்ததாவது:தமிழ்நாடு சமரச மையம் சென்னை உயர்நீதிமன்றத்தால் ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. வழக்கு தரப்பினர்கள் தம் எதிர் தரப்பினருடன் பேசி சமரசம் செய்து கொள்ள ஏதுவாக நீதிமன்றம் இங்கு வழக்குகளை அனுப்புகிறது. இந்த சமரச மையங்களில் நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட சமரசர்கள், வழக்கு தரப்பினர்கள், சுமுகமாக வழக்குகளை முடித்துக் கொள்ள உதவுவார்கள். நீதிமன்றம் வழங்கும் இந்த சேவைக்கு வழக்கு தரப்பினர்கள் எவ்வித கூடுதல் கட்டணமும் செலுத்த தேவையில்லை. தனிப்பட்ட முறையில் சுமுகமாக பேச்சு வார்த்தை நடத்த தனி அறைகள், காத்திருக்க இடவசதி முதலியன சமரச மையத்தில் உள்ளன. நீதிமன்றத்தின் அனைத்து வேலை நாட்களிலும் நாள்முழுவதும் சமரச மையம் இயங்கும்.

மிக எளிய முறையில் வேகமாகவும், பணம் விரையமில்லாமலும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தேர்வுகளை காணவும், இரு தரப்பினரிடமும் நேரம், சிரமம், செலவு மற்றும் மனஉளைச்சல் குறைகிறது. தீர்ப்பு இரு தரப்பினர்களுக்கும் திருப்தி அளிக்கும் வகையில் இந்த சமரச மையங்களின் சேவை இருக்கும். இந்த சேவை மையத்தின் பயன்களை பொதுமக்கள் அறியும் வண்ணம் விழிப்புணர்வு ஒவ்வொருவரும் ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது: வழக்கு தரப்பினர்கள் தங்களுடைய முரண்பாடுகளை நேரடியாக சமரசர் முன்னிலையில் பேசி சுமுகமாக தீர்வு காண்பதே சமரசமாகும்.

இது வழக்கிற்கும், வழக்கின் தரப்பினருடைய கட்சிக்கும் குந்தகமில்லாத ஒரு முயற்சியாகும். மேலும், இவை முழுவதும் வழக்கு தரப்பினருடைய விருப்பத்தின் அடிப்படையிலேயே தாங்களே முன்வந்து ஒப்புக்கொள்வதால் சகஜமான, ஒரு சுமூக சூழல் மற்றும் இரு தரப்பினருடைய உணர்வுகள், தேவைகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இரு தரப்பினருக்கும் வெற்றி என்ற நிலை உருவாக்கப்படுகிறது. வழக்கறிஞர்களுக்கு தொழில் மற்றும் பொருளாதார நன்மைகளுக்கும் மேலாக ஆத்ம திருப்தியும், பணி நிறைவும் ஏற்படுகிறது. சமரசத்தில் வழக்குகளில் எவ்வித மேல்முறையீடு இல்லாமலும், நிறைவாகவும் இறுதியான சுமுகமான தீர்வு ஏற்படுகிறது.

இத்தகைய சேவை மையங்களின் செயல்பாட்டை பொதுமக்கள் பயன்படுத்தி சுமூகமான சூழ்நிலையை உருவாக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.பின்னர் அலுவலர்கள் மற்றும் பொது மக்களுக்கு சமரச மையம் செயல்பாடுகள் குறித்த துண்டு பரசுரங்களை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.கே.ராஜசேகரன், வழக்கறிஞர் அசோசியேசன் தலைவர் ஜி.சீனிவாசன், வழக்கறிஞர் எஸ்.மணிகண்டசாமி, சட்ட சேவை ஆணையக்குழு செயலர் தங்கவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து