முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உயர்கல்வி பயில ரூ.4 லட்சம் பிணையில்லாமல் கடன் உதவி ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நடராஜன் தகவல்

புதன்கிழமை, 11 ஏப்ரல் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.24 லட்சம் வரை பிணையில்லாமல் கடன் உதவி வழங்கப்படுவதாக கலெக்டர் முனைவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் புனித அந்திரேயா மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித் துறையின் சார்பாக மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு பயின்ற மாணவ,  மாணவிகள், அவர்களது மேற்படிப்பை தொடரும் வகையில் கல்விக் கடனுதவி பெறும் வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:- தமிழ்நாடு அரசு, பள்ளிக்கல்வித்துறையின் மூலம் மாணவ, மாணவியர்களின் கல்வி கற்கும் ஆர்வத்தினை ஊக்குவித்திடும் வகையில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.  அந்த வகையில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதி உயர்கல்வி பயிலவுள்ள மாணவ,  மாணவியர்கள் சிரமமின்றி  கல்விக்கடன்  பெற்று பயனடையும் வகையில் தேவையான ஆலோசனைகளை வழங்கிட ஏதுவாக இந்த விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்படுகிறது. இதற்காக மாவட்ட அளவில் கலெக்டர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, குழு உறுப்பினர்களாக திட்ட அலுவலர் (ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்), மண்டல மேலாளர், அரசு கலைக் கல்லூரி முதல்வர், அரசு மருத்துவக் கல்லூரி முதலவர், மாவட்ட அளவிலான கல்வியாளர் ஒருவர், அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் ஒருவர் உறுப்பினர்களைக் கொண்டதாகவும் மற்றும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் உறுப்பினர் செயலராகவும் இடம் பெற்றுள்ளனர்.
 கல்விக் கடன் விரும்பும் மாணவர்கள் மத்திய உயர்கல்வித் துறையினால் நடத்தப்படும் வித்யாலட்சுமி  என்ற இணையதளத்தின் மூலமாக விண்ணப்பம் செய்யலாம்.   இவ்வாறு கல்விக்கடன் பெற விரும்பும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவ, மாணவியர்களில் எஸ்.சி.எஸ்.டி. பிரிவு பிரிவு மாணவ-மாணவிகள் குறைந்த பட்சம் 55 சதவீதம் மதிப்பெண்களும், பொதுப்பிரிவினர் 60 சதவீதம் மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். மேலும் மாணாக்கர்கள், இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.  மேற்படிப்பு தொழிற்கல்வியாகவோ அல்லது பொறியியல் கல்வியாகவோ இருக்க வேண்டும்.  கல்வி உள்நாட்டிலோ அல்லது வெளி நாட்டிலோ பயிலுவதாக அமைந்திருக்க வேண்டும்.
 உயர்கல்வி சார்பான கடன்கள் பட்டப்படிப்பு, மருத்துவப் படிப்பு, விவசாயம் சார்ந்த படிப்பு, கால்நடை மருத்துவப் படிப்பு, சட்டப்படிப்பு, பல் மருத்துவம் ஆகிய கல்விகள், மத்திய அல்லது மாநில அரசினால் அங்கீகரிக்கப்பட்ட கல்விகளுக்கு மற்றும் பல்கலைக் கழக கல்விகளுக்கு கல்விக் கடன் வழங்க இயலும்.  இக்கடன்களுக்கான அதிகபட்ச தொகையாக இந்தியாவில் பயிலும் மாணவர்களுக்கு ரூ.30லட்சமும்,  வெளிநாட்டில் சென்று படிப்போராயின் ரூ.40லட்சமும், வழங்கப்படும்.
 கல்விக் கடனாக ரூ. 4 லட்சம் வரை பிணையம் ஏதும் இல்லாமல் வழங்கப்படுகிறது. அதேபோல  ரூ.4 லட்சம் முதல் ரூ.7.50 லட்சம் வரை மூன்றாவது நபர் கடன் பத்திரம் பிணையம் கொடுக்க வேண்டும்.  ரூ.7.50 லட்சத்திற்கு மேல் கடன் பெற்றவர்கள் சொத்து பிணையம் கொடுக்க வேண்டும்.   மேலும், இவ்வாறு கல்விக்கடன் பெற விண்ணப்பிப்பதற்கு நிரந்தர  கணக்கு  எண் கட்டாயம்.  கல்விக்கடன் தொகையை மீள் செலுத்துவற்கு  4 வருட படிப்பு எனில் 6 மாதம்,  1 வருடம் கழித்தது முதல் அதாவது 5 வருட முடிவில் வட்டி மற்றும் அசல் திரும்பச் செலுத்தப்பட வேண்டும். எனவே உயர்கல்வி பயில கல்விக் கடனுதவி பெற விரும்பும் மாணவ, மாணவியர்கள் இத்தகைய திட்டங்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு பேசினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.முருகன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ச.சதீஷ்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை உள்பட அரசு அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து