2 ஆண்டுகளுக்குத் தாய்ப் பாலூட்டினால் 8 லட்சம் குழந்தை இறப்பை தடுக்கலாம் உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 13 ஏப்ரல் 2018      உலகம்
mother milk 2018 04 13

ஜெனிவா: குழந்தை பிறந்த பிறகு முதல் 2 ஆண்டுகளுக்கு தாய்ப்பாலூட்டினால் ஆண்டுதோறும் 8.2 லட்சம் குழந்தைகளின் உயிரிழப்பைத் தடுக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு (டபிள்யூஎச்ஓ) தெரிவித்துள்ளது.

பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்டுவதை ஊக்குவிக்கும் வகையில் டபிள்யூஎச்ஓ-யுனிசெப் சார்பில் 10 அம்ச புதிய வழிமுறைகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. குழந்தைக்கு பாலூட்டுவதற்காக தாய்மார்கள் என்ன செய்ய வேண்டும், மருத்துவமனைகள் என்ன செய்ய வேண்டும் என்பன குறித்து இதில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக யுனிசெப் செயல் இயக்குநர் ஹென்ரீட்டா எச் போர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
குழந்தைகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருப்பதற்கு தாய்ப்பாலூட்டுவது மிகவும் அவசியம். குழந்தை பிறந்த முதல் ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பாலூட்டினால் நோய் தொற்றுகளிலிருந்தும் உயிரிழப்பிலிருந்தும் பாதுகாக்கலாம்.

தாய்ப்பாலூட்டாமல் விட்டுவிட்டாலோ அல்லது குறைவான காலத்துக்கு தாய்ப்பாலூட்டினாலோ, வயிற்றுப்போக்கு மற்றும் இதர நோய் தொற்று நோய்கள் காரணமாக பச்சிளங் குழந்தைகள் உயிரிழக்க அதிக வாய்ப்பு உள்ளது.

உலகம் முழுவதும் சரியாக தாய்ப்பாலூட்டாத காரணத்தால் லட்சக் கணக்கான குழந்தைகள் ஆண்டுதோறும் உயிரிழக்கின்றன. எனவே, பிறந்தது முதல் 2 ஆண்டுகளுக்கு தாய்ப்பாலூட்டினால் ஆண்டுக்கு 5 வயதுக்குட்பட்ட 8.2 லட்சம் குழந்தைகளின் உயிரிழப்பைத் தடுக்க முடியும்.

அறிவு மேம்படும்
தாய்ப்பாலூட்டுவதால் குழந்தையின் கவனம், அறிவுத்திறன் மேம்படும். மேலும் குழந்தைக்கு பாலூட்டுவதன் மூலம் தாய்மார்களுக்கு மார்பக புற்று நோய் வருவதைத் தடுக்க முடியும். இது தவிர, தனிப்பட்ட குடும்பத்தினர் மற்றும் சம்பந்தப்பட்ட நாடுகளின் அரசுகள் சுகாதாரத்துக்காக ஒதுக்கப்படும் செலவு கணிசமாக குறையும். எனவே, தாய்ப்பாலூட்டுவதை ஊக்குவிக்க, ஆதரிக்க வேண்டியது அவசியமாகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டாக்டர் டெட்ராஸ் அதானம் கேப்ரியேசஸ் கூறும்போது, “நோயை குணமாக்குவது மட்டுமே மருத்துவமனைகளின் பணி அல்ல. பொதுமக்கள் வாழ்நாள் முழுவதும் நோயின்றி ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை ஊக்குவிக்க வேண்டும். குறிப்பாக பச்சிளங் குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்டுவதன் அவசியத்தை வலியுறுத்த வேண்டும்” என்றார்.

SANKAGIRI KOTTAI | Sankagiri Hill Fort travel | சங்ககிரி மலை கோட்டை பயணம்

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து