அஜர்பைஜான் அதிபராக இல்ஹம் அலியேவ் 4-வது முறையாகத் தேர்வு

வெள்ளிக்கிழமை, 13 ஏப்ரல் 2018      உலகம்
ajarbaijan 2018 04 13

அஜர்பைஜான்: அஜர்பைஜானின் அதிபராக இல்ஹம் அலியேவ் (56) மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

அஜர்பைஜானில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த புதன்கிழமை நடைபெற்றது.

இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் அலியேவ் உள்பட எட்டுபேர் களத்தில் இருந்தனர். தேர்தலில் 74.30 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு நிறைவு பெற்றதைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.


இதில், 86 சதவீத வாக்குகளைப் பெற்று அலியேவ் மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். ஏழு ஆண்டுகளுக்கு அவர் இப்பதவியை வகிப்பார். அலியேவ் 4-ஆவது முறையாக அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தனது தந்தை ஹெய்தர் அலியேவின் மறைவுக்குப் பிறகு இல்ஹம் அலியேவ் கடந்த 2003-ஆம் ஆண்டு அஜர்பைஜானின் அதிபராக முதல் முறையாக பதவியேற்றார். அதன்பிறகு கடந்த 2008 மற்றும் 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களிலும் அதிபர் பதவிக்கு மீண்டும் இல்ஹம் அலியேவே தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தேர்தல் வெற்றி குறித்து அலியேவ் கூறுகையில், அஜர்பைஜானின் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை முதன்மையானதாக கருதி தமக்கு வாக்களித்த குடிமக்களுக்கு நன்றி என்றார்.

இல்ஹம் அலியேவின் இந்த வெற்றிக்கு துருக்கி அதிபர் ரெசிப் தயீப் எர்டோகன் மற்றும் ரஷிய அதிபர் விளாதீமிர் புதின் ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து