முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மீனாட்சி திருக்கல்யாண வைபத்தை பக்தர்கள் கண்டுகளிக்க 20 இடங்களில் அகன்ற ஒளித்திரைகள் அமைக்க ஏற்பாடு

வெள்ளிக்கிழமை, 13 ஏப்ரல் 2018      மதுரை
Image Unavailable

 மதுரை - மதுரை மீனாட்சி திருக்கல்யாண வைபவத்தினை பக்தர்கள் நேரடி ஒளிபரப்பில் காண ஏதுவாக அகன்ற ஒளித்திரைகள் 20 இடங்களில் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே போல் அருள்மிகு கள்ளழகர் வைபத்தினை காண நகர்பகுதிகளில் சுமார் 10 இடங்களில் அகன்ற ஒளித்திரைகள் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  
மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சித்தரைத்திருவிழா  தொடர்பான சிறப்புக் கூட்டம் கலெக்டர் வீரராகவ ராவ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது,
மதுரை சித்திரைப் பெருவிழா அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலில் வரும் 17-ம் தேதி முதல் 29-ம் தேதி வரையிலும், அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில் சித்திரைத் திருவிழா வரும்  15-ம் தேதி முதல் மே மாதம் 04-ம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது. கள்ளழகர் அழகர்கோயிலிலிருந்து புறப்பட்டு வண்டியூர் செல்லும் வரை 435 இடங்களில் அமைக்கப்படும் திருக்கண் மண்டபங்களில் பந்தல்கள் கண்டிப்பாக தகரத்தினால் கூரை வேயப்பட வேண்டும்.
குறிப்பாக 30-ம் தேதி அருள்மிகு கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்விற்கு லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை தரவிருப்பதால், காவல்துறையின் சார்பில் தற்காலிக உயர் கோபுரங்கள் அமைத்தல், கண்காணிப்பு, உணவளித்தலின்போது உணவுப் பரிசோதனை மேற்கொள்ளுதல், கூட்டத்தை கட்டுப்படுத்துதல் போன்றவற்றை முறையாக மேற்கொள்ள வேண்டும். 
மதுரை மாநகராட்சி ஆணையர், அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் நிர்வாக அலுவலர், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் தமிழ்நாடு மின்சார வாரிய கண்காணிப்பு பொறியாளர் ஆகியோர் இணைந்து தேரோட்டம் தங்குதடையின்றி நடைபெறும் வகையில் சாலைகள் பராமரிக்கப்படுவதை உறுதி செய்திடல் வேண்டும். தங்கு தடையற்ற மின்சாரம் வழங்கிடவும், தேவையான இடங்களில் போதுமான தீ தடுப்பு ஊர்திகள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்புப்பணி மேற்கொள்ளவும், வழிநெடுகிலும் சாலைகளை பராமரித்திடவும், தொலைப்பேசி இணைப்புகள் தங்குதடையின்றி இயங்கும் வகையிலும் தக்க ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். திருவிழா காலங்களில் மாற்று வழிகளில் பேருந்துகளை இயக்குவது குறித்தும், தேவையான சிறப்பு பேருந்து வசதிகள் செய்வது குறித்தும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 
கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், மீனாட்சி திருக்கல்யாண நிகழ்ச்சியின் போது போதுமான அளவு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டிகளை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட வேண்டும்.  மேலும் மருத்துவம் மற்றும் பொது சுகாதாரம் போன்றவற்றை கண்காணிக்கும் பணி அரசு இராசாசி மருத்துவமனை முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை துணை இயக்குநர் ஆகியோரால் மேற்கொள்ளப்பட வேண்டும்.
புறநகர்ப்பகுதிகளில் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றங்கள் மூலமாக மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்தை பராமரித்து பாதுகாக்க மேலூர், மதுரை கிழக்கு மற்றும் மேற்கு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் மூலமாக தக்க முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். பக்தர்கள் திருக்கல்யாண வைபவத்தினை நேரடி ஒளிபரப்பில் காண ஏதுவாக அகன்ற ஒளித்திரைகள் 20 இடங்களில் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  அருள்மிகு கள்ளழகர் வைபத்தினை காண நகர்பகுதிகளில் சுமார் 10 இடங்களில் அகன்ற ஒளித்திரைகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  திருவிழாவின் போது பணியாளர்கள் மற்றும் பக்தர்களுக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.
 இந்த கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன்,  இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் நடராசன், கள்ளழகர் கோயில் துணை ஆணையர் மாரிமுத்து, வருவாய் கோட்டாட்சியர்கள் அரவிந்தன் (மதுரை), சிவகாமி (மேலூர்) மற்றும் வட்டாட்சியர்கள் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து