இஸ்ரேல் எல்லை பகுதியில் மீண்டும் கலவரம்

சனிக்கிழமை, 14 ஏப்ரல் 2018      உலகம்
israel 2018 04 14

காஸா: இஸ்ரேல் எல்லைப் பகுதியில் 3-வது வாரமாக பாலஸ்தீனர்கள் நடத்திய போராட்டத்தில் இஸ்ரேல் வீரர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

கடந்த மாதம் 30-ம் தேதி முதல் நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களில் இதுவரை 33 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, எல்லைக்கு அப்பால் இருந்த இஸ்ரேல் வீரர்களை நோக்கி சில பாலஸ்தீன இளைஞர்கள் கற்களை வீசினர். அதற்குப் பதிலடியாக, அந்த இளைஞர்கள் மீது இஸ்ரேல் ராணுவத்தினர் கண்ணீர் புகைகுண்டுகளை வீசித் தாக்கினர்.


இந்த மோதலில், 300-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததாக காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

யூதக் குடியேற்றத்தை எதிர்த்து கடந்த 1976-ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின்போது 6 பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் படையினரால் கொல்லப்பட்டனர். அந்தச் சம்பவத்தின் 42-வது நில தினத்தையொட்டி, நில மீட்புக்கான மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் பாலஸ்தீனர்கள் கடந்த மாதம் 30-ஆம் தேதி முதல் ஈடுபட்டு வருகின்றனர். இஸ்ரேல் எல்லையிலுள்ள தடுப்பு வேலி அருகே இந்த ஆர்ப்பாட்டம் அமைதியான முறையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், அதில் பங்கேற்ற சிலர் தடுப்பு வேலியைத் தாண்டி அத்துமீற முயன்றதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, இஸ்ரேல் படையினர் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். மேலும், ரப்பர் குண்டுகள், கண்ணீர் புகை குண்டுகள் ஆகியவற்றின் மூலமும் பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் படையினர் தாக்குதல் நடத்தினர்.

இந்த வன்முறைச் சம்பவங்களில் 33 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்; நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து