உ.பி.யில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பது உறுதியாகியுள்ளது: அகிலேஷ் யாதவ் ஒப்புதல்

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் பகுதியில் நிகழ்ந்த பாலியல் பலாத்கார சம்பவத்தின் மூலம், மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்திருப்பது உறுதியாகியிருப்பதாக சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள சமாஜ்வாடி கட்சித் தலைமையகத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
உத்தரப் பிரதேசத்தை ஆளும் பா.ஜ.க அரசானது, மாநில மக்களுக்கு எதிராகவும், எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவும் அட்டூழியங்களில் ஈடுபட்டுள்ளது. உன்னாவ் சம்பவம் குறித்த விசாரணையை சி.பி.ஐ தனது கையில் எடுத்துள்ளது. இந்த விசாரணையின் மூலம் உண்மை வெளிச்சத்துக்கு வரும் என நம்புகிறேன். சட்டம், ஒழுங்கு தொடர்பாக மாநில அரசு மிகப்பெரிய அறிவிப்புகளை வெளியிட்டது. அந்த அறிவிப்புகள் அனைத்தும் பொய் என்பதை உன்னாவ் சம்பவம் வெட்ட வெளிச்சமாகி விட்டது.
இந்த விவகாரத்தில், அலாகாபாத் ஐகோர்ட் தலையிட்டு உத்தரவு பிறப்பித்த பின்னரும், மாநில அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றார் அகிலேஷ் யாதவ்.