சிறுமி ஆசிபா கொலை வழக்கில் 8 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

திங்கட்கிழமை, 16 ஏப்ரல் 2018      இந்தியா
Asifa murder charge sheet 2018 04 16

காஷ்மீர், காஷ்மீர் மாநிலம், கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி ஆசிபா பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது தொடர்பாக கைது செய்யப்பட்ட 8 பேர் மீதான குற்றப்பத்திரிகை நேற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, கைது செய்யப்பட்ட 8 பேரில் 7 பேர் தாங்கள் எந்தக் குற்றமும் செய்யவில்லை, எங்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்துங்கள் என்று நீதிபதியிடம் முறையிட்டனர்.

காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டம், ரஸா மலைப்பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 10-ம் தேதி பழங்குடி முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஆசிபா திடீரென்று காணாமல் போனார். அதன்பின் 17-ம் தேதி ரஸானா காட்டுப்பகுதியில் உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். அந்தச் சிறுமியின் உடலை உடற்கூறு பரிசோதனை செய்ததில் அவர் கூட்டு பலாத்காரம் செய்தும், போதை மருந்து செலுத்தியும் கொல்லப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தி, சிறுமி கடத்தப்பட்டு கோயிலில் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் கோயில் நிர்வாகி சஞ்சி ராம், சிறப்பு சுரேந்தர் வர்மா, அவரின் நண்பர் பர்வேஷ் குமார், அவரின் உறவினரும், மைனர் சிறுவனான பர்வேஷ் குமார் ஆகியோரைக் கைது செய்தனர். மேலும், இவர்களிடம் இருந்து ஆதாரங்களை அழிக்கப் பணம் பெற்றதாகக் கூறப்படும் போலீஸ் அதிகாரி தீபக் கஜுரியா, விசாரணை அதிகாரி திலக் ராஜ், துணை ஆய்வாளர் ஆனந்த் தத்தா ஆகியோரும் சிறப்பு விசாரணைக் குழுவினரால் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 3 போலீஸ் அதிகாரிகள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஒருவர் மட்டும் மைனர் ஆவார். கைது செய்யப்பட்ட இந்த 8 பேரில் 7 பேர் மட்டும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஒருவர் மைனர் என்பதால், சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கடந்த 9-ம் தேதி சிறப்பு விசாரணைக் குழுவினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வந்தபோது, வழக்கறிஞர்கள் தடுத்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், இன்று வழக்கு தொடர்பான வழக்கறிஞர்கள் தவிர மற்ற வழக்கறிஞர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மாவட்ட நீதிபதி சஞ்சய் குப்தா முன், மாநில சிறப்பு விசாரணைக் குழுவினர் 400 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். குற்றம் சாட்டப்பட்டுள்ள 7 பேருக்கு தனிக் குற்றப்பத்திரிகையும், சிறார் நீதிமன்றத்தில் உள்ள ஒருவருக்கு தனிக் குற்றப்பத்திரிகையும் தனியாக நகல்கள் வழங்கப்பட்டன.

இதையடுத்து, அடுத்த கட்ட விசாரணையை வரும் 28-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். மேலும், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சிறார் ஜாமீன் கோரி மாவட்ட தலைமை நீதிபதியிடம் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவை வரும் 26-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதி அறிவித்தார். இந்தக் குற்றப்பத்திரிகையில், சிறுமி ஆசிபா கடத்தப்பட்டது, பலாத்காரம் செய்யப்பட்டது, கொலை செய்தது, திட்டமிட்டு ஆதாரங்களை மறைத்தது போன்ற பிரிவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதேபோல குற்றம் சாட்டப்பட்டுள்ள அந்தச் சிறாருக்கும் இதே பிரிவுகள் தரப்பட்டுள்ளன. குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்ட உடன், குற்றம் சாட்டப்பட்டுள்ள 7 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சிறப்பு போலீஸ் விசாரணை அதிகாரி தீபக் கஜுரியா, ''ஆசிபா பலமுறை பலாத்காரம் செய்ததாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டு பொய்யானது. தனக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்துங்கள்'' என்று கோஷமிட்டார்.

சிறுமி ஆசிபா கடத்தி வைக்கப்பட்டு இருந்ததாகக் கூறப்படும் கோயிலின் நிர்வாகி சஞ்சிராம் அழைத்துச் செல்லப்படும் போது, அவரின் மகள் மது சர்மா, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று கோஷமிட்டார். மேலும், நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை நகல் அளிக்கப்பட்டபோது, குற்றம் சாட்டப்பட்டுள்ள 7 பேரும் தங்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என்று நீதிபதியிடம் முறையிட்டனர்.

11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? பொதுமக்கள் கருத்து

Vaara Rasi Palan ( 22.07.2018 to 28.07.2018 ) | வார ராசிபலன் | Weekly Tamil Horoscope

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து