முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாலைகள் முழுமையாக பராமரிக்கப்படும் வரை வாகனங்களுக்கு 50சதவீத கட்டணம் வசூல் தொடரும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு:

திங்கட்கிழமை, 16 ஏப்ரல் 2018      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- சாலைகள் முறையாக பராமரிக்கப்படும் வரையில் கப்பலூர் டோல்கேட் வழியே சென்றிடும் வாகனங்களுக்கு 50சதவீத கட்டணம் வசூலிக்கப்படுவது தொடரும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் விருதுநகரைச் சேர்ந்த மணிமாறன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், மதுரையிலிருந்து விருதுநகர் செல்லும் சாலையில் சுங்க கட்டணம் வசூலித்திடும் கப்பலூர் டோல்கேட் அமைந்துள்ளது.சமயநல்லூர் முதல் விருதுநகர் வரையில் உள்ள நான்குவழிச்சாலை இந்த டோல் மையத்தின் பராமரிப்பில் உள்ளது.இந்த சாலை முறையாக பராமரிக்கப்படாமல் குண்டும் குழியுமாகி சேதமடைந்து உள்ளது.இதனால் அதிகளவு விபத்துக்கள் ஏற்படுகிறது.சாலையை சீரமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது பணிகள் விரைவில் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தும் இதுவரை சாலை சீரமைக்கப்படவில்லை.எனவே சாலைகள் முறையாக பராமரிக்கப்படாததால் குறைவான டோல்கட்டணம் வசூலிக்க வேண்டும்.எனினும் சாலைகள் முறையாக பராமரிக்கப்படாத நிலையிலும் கப்பலூர் டோல்கேட்டில் முழுமையான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் கப்பலூர் டோல்கேட்டின் கீழ்வரும்சாலைகளை முறையாக சீரமைக்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, சுங்க கட்டணம் வசூலிக்கும் சாலைகள் சேதம் அடைந்திருந்தால் அந்த சேதம் சரிசெய்யப்படும் வரை குறைவாக கட்டணம் வசூலிக்க வேண்டும்.சாலைகள் முழுமையாக சரிசெய்யப்பட்ட பிறகு நெடுஞ்சாலை அதிகாரிகள் குழு ஆய்வு செய்து முழுகட்டணம் வசூலிக்கலாம் என சட்டத்தில் உள்ளது.அதன்படி கப்பலூர் டோல்கேட் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகள் பராமரிக்கப்படும் வரை கப்பலூர் டோல்கேட்டில் வாகனங்களுக்கு 50சதவீத கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று நீதிபதிகள் அப்போது உத்தரவிட்டிருந்தனர்.இதை தொடர்ந்து கப்பலூர் டோல்கேட் வழியாக சென்றிடும் வாகனங்கள் அனைத்திற்கும் 50சதவீத கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.மேலும் சமயநல்லூர் தொடங்கி திருமங்கலம் பகுதி வரையிலான நான்கு வழிச்சாலையில் தற்போது புதிய சாலை அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று இது தொடர்பான வழக்கு உயர்நீதி மன்ற மதுரை கிளையில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது  கப்பலூர் டோல்கேட் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகள் முழுமையாக பராமரிக்கப்படும் வரை 50சதவீத கட்டணம் வசூல் தொடரும் என்று உத்தரவிடப்பட்டது.மேலும்  பழுதடைந்த 18 கி.மீ சாலையின் தற்போதைய நிலை குறித்து பதில் மனுதாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டதுடன் தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குநருக்கு  உத்தரவிட்டு.விசாரணை வரும் ஜூன் 13-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் படி சாலைகள் அனைத்தும் முழுமையாக பராமரிக்கப்பட்ட பின்னரே கப்பலூர் டோல்கேட் நிர்வாகம்  100சதவீதம் கட்டணம் வசூலிக்க முடியும் என்பது வாகன ஓட்டிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து