முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முடக்கப்படுமென பரவிடும் வதந்தியால் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை மாற்றும் முயற்சியில் மக்கள் தீவிரம்!

புதன்கிழமை, 18 ஏப்ரல் 2018      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை மத்திய அரசு முடக்கப் போவதாக பரவிடும் வதந்தியால் தங்களிடம் உள்ள இரண்டாயிரம் ருபாய் நோட்டுக்களை மாற்றிடும் முயற்சியில் பொதுமக்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த காலத்தில் கருப்புபண மதிப்பிழப்பு என்ற பெயரில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் நாட்டு மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது.அப்போது புழக்கத்தில் விடப்பட்ட இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் நாட்டில் மீண்டும் கருப்புபண நடமாட்டத்தை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஒரு சில தென் மாநிலங்களை தவிர அனைத்து வட மாநிலங்களிலும் உள்ள ஏடிஎம் மையங்களில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் வைக்கப்படாததால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.பெரிய அளவிலான தொகை வங்கியிலிருந்து எடுக்கப்பட்டால்,இரண்டாயிரம் ரூபாய் தவிர்த்து 500,200 மற்றும் 100 ரூபாய் நோட்டுக்களையே வங்கிகள் வழங்குகின்றன. இவ்வாறாக வழங்கப்படும் சில்லறை ரூபாய் நோட்டுக்களை சுமந்து செல்ல முடியாம் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.ஒரு வாரத்திற்குள்ளாக நிலைமை சீரடைந்திடும் என்று மத்திய அரசு அறிவிப்பு செய்திருந்தாலும் இன்று வரை இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை வடமாநில ஏடிஎம்-களில் காணமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் உள்ள ஏடிஎம் களில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளின் புழக்கம் சிறிது சிறிதாக குறை ஆரம்பித்துள்ளது.அதற்கு பதிலாக 500ரூபாய் நோட்டுகளின் வரத்து அதிகமாக காணப்படுகிறது.குறிப்பாக மதுரை மாவட்டம் மற்றும் திருமங்கலம் நகரிலுள்ள முக்கிய வங்களின் ஏடிஎம்களில் கடந்த சில நாட்களாக இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளின் வரத்து நின்று போய்விட்டது.இதனால் கருப்புபண ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை மத்திய அரசு முடக்கிவிடப் போவதாக வதந்திகள் பரவி வருகிறது.காற்றை விட வேகமாக பரவிவரும் இந்த வதந்திகளால் பொதுமக்கள் தாங்கள் வைத்துள்ள இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் திடீரென்று செல்லாமல் போய்விடும் என்று அஞ்சி அவற்றை வங்கிகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பரிவர்த்தனைகளுக்கு கொடுத்து மாற்றி ஆரம்பித்துவிட்டனர். இதனிடையே மதுரை மாவட்டத்திலுள்ள சில முக்கிய நிறுவனங்கள் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் வாங்குவதை நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது.
திடீரென்று பிரதமர் மோடி தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றிடுவார் அப்போது இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாமல் போய்விடும் என்ற பேச்சுக்கள் மதுரை மாவட்டத்தில் அதிகரித்து வருவதால் மீண்டும் ஒரு பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஏற்பட வாய்ப்பிருப்பது போன்ற மாயத் தோற்றம் உருவாகியுள்ளது.எனவே இந்த விஷயத்தில் மத்திய அரசும் அதன் நிதி அமைச்சகமும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் குறித்து மக்களிடம் ஏற்பட்டுள்ள அச்சத்தை நீக்கிடும் வகையில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.மத்திய அரசு துரித நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் விவகாரம் விரைவில் விஸ்வரூபம் எடுத்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து