மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது

புதன்கிழமை, 18 ஏப்ரல் 2018      ஆன்மிகம்
Meenakshi Temple chithirai festival start 2018 4 18

மதுரை : உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நேற்று காலை தங்க முலாம் பூசப்பட்ட கொடி கம்பத்தில் வேத மந்திரங்கள், மேளதாளம் முழங்க கொடியேற்றத்துடன் துவங்கியது. சித்திரை திருவிழாவையொட்டி வரும் 29-ம் தேதி வரை 12 நாட்கள் மீனாட்சி அம்மனும், சுந்தரேஸ்வரர் சுவாமியும் மாசி வீதிகளிலும், சித்திரை வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை மாதத்தில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. உலக பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. கோவிலில் உள்ள சுவாமி சன்னதி எதிரே உள்ள கம்பத்தடி மண்டபத்தை சுற்றி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. கொடியேற்றம் நிகழ்ச்சியையொட்டி முருகன், விநாயகர், சண்டிகேஸ்வரர், பஞ்சமூர்த்திகளுடன் மீனாட்சி அம்மனும், சுந்தரேஸ்வரரும், பிரியாவிடையும் காலை 9.30 மணிக்கு கம்பத்தடி மண்டபத்திற்கு எழுந்தருளினர். அதை தொடர்ந்து ஸ்தானிக பட்டர் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட பட்டர்கள் வெள்ளி கும்பத்தில் புனித நீர் அடங்கிய கலசங்களை வைத்து விசேஷ பூஜைகள் நடத்தினர். முதலில் லிங்கேஸ்வர பூஜை, புண்ணியாகா வாகனம், பஞ்ச காவியம், ரிஷப யாகம் மற்றும் கொடிமர பூஜைகள் நடைபெற்றன.

பின்னர் 10.10 மணிக்கு கொடி மரத்தில் வேத மந்திரங்கள், மேளதாளம் முழங்க ரிஷப கொடி ஏற்றப்பட்டது. அதை தொடர்ந்து கொடிமரத்தை சுற்றிலும் குங்குமம், சந்தனம் பூசப்பட்டது. பூக்கள், மாலைகள் சுற்றப்பட்டது. தர்ப்பைப்புல் போன்றவைகள் சுற்றி கட்டப்பட்டது. அதை தொடர்ந்து மலர் பூஜை நடத்தப்பட்டது. கொடி மர உயரத்தில் இருந்து வண்ண வண்ண பூக்களை கொடி மரத்தில் தூவி பூஜை நடத்தப்பட்டது. இதையடுத்து தீபாராதனை காட்டப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், கோவில் இணை ஆணையர் நடராஜன் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொடியேற்றம் நிகழ்ச்சியை கண்டு தரிசனம் செய்தனர். கொடியேற்ற நிகழ்ச்சியை அடுத்து நேற்று முதல் வரும் 29-ம் தேதி வரை தினசரி காலை, மாலை நேரங்களில் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரர், பிரியாவிடையும் சிம்ம வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம், காமதேனு வாகனம், ரிஷப வாகனம் போன்ற பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள். சுவாமிகள் உலா வரும் போது சுவாமிகளுக்கு முன்பு பஞ்சமூர்த்திகள் பூச்சர குடைகள், தீவட்டிகள், யானை, குதிரை, ஒட்டகங்கள், மாடு, கோலாட்டம், நாதஸ்வர கலைஞர்கள், ஒயிலாட்டம் போன்ற பல்வேறு பரிவாரங்களுடன் உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

சித்திரை திருவிழாவையொட்டி பொற்றாமரைக்குளம், ஐந்து கோபுரங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜெகஜோதியாக காட்சியளிக்கிறது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வரும் 25-ம் தேதி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகமும், 26-ம் தேதி திக்கு விஜயம் நிகழ்ச்சியும், 27-ம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்ச்சியும், 28-ம் தேதி தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை ஆணையர் நடராஜன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

திருக்கல்யாண உற்சவத்தினை தரிசிக்க விரும்பும் பக்தர்களின் வசதிக்காக இத்திருக்கோவிலின் இணையதளத்தில் வரும் 22-ம் தேதி வரை கட்டண சீட்டு முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளலாம். இத்திருக்கோவிலுக்கு சொந்தமான மேற்கு சித்திரை வீதியில் உள்ள பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதி வரவேற்பு அறையில் மேற்படி நாட்களில் நேரடியாக முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருக்கல்யாண உற்சவத்தினை தரிசிக்க 500 ரூபாய் மற்றும் 200 ரூபாய் கட்டண சீட்டு பெற விரும்பும் பக்தர்கள் நிரந்தர வருமான வரி கணக்கு அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், நடப்பு வங்கி சேமிப்பு கணக்கு, ஓட்டுனர் உரிமம், குடும்ப அட்டை, தேசிய அடையாள அட்டை சான்றிதழ்கள் ஆவணங்களில் ஏதாவது ஒன்று தங்களது கைபேசி எண்ணுடன் இருப்பின் மின் அஞ்சல் முகவரி விபரம் தந்து முன்பதிவு செய்து கொள்ளலாம். உறுதி செய்யப்பட்ட மின்னஞ்சல், குறுந்தகவல் கிடைக்கப் பெற்றவர்கள் வரும் 23-ம் தேதி காலை 10 மணி முதல் 26-ம் தேதி மாலை 7 மணி முடிய பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதி வரவேற்பு அறையில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு விற்பனை மையத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள கட்டண சீட்டு விற்பனை நிலையத்தில் கட்டண சீட்டிற்கான தொகையினை ரொக்கமாக செலுத்தி கட்டண சீட்டினை பெற்று கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து