முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காமன்வெல்த்தில் பதக்கம் வென்றது உலக போட்டிக்கு ஊக்கம் அளிக்கிறது - டேபிள் டென்னிஸ் வீரர் சரத்கமல் பேட்டி

புதன்கிழமை, 18 ஏப்ரல் 2018      விளையாட்டு
Image Unavailable

சென்னை : காமன்வெல்த்தில் மூன்று பதக்கம் வென்றதால் உலக சாம்பியன்ஷிப் டேபிள் டென்னிஸ் போட்டியில் பங்கேற்பதற்கு ஊக்குவிப்பாக இருப்பதாக தமிழக வீரர் சரத்கமல் தெரிவித்துள்ளார்.

3 பதக்கங்கள்...

ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டுகோஸ்ட் நகரில் நடந்த 21-வது காமன்வெல்த் விளையாட்டுப்போட்டியில் தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத்கமல் 3 பதக்கம் பெற்றார். அவர் அணிகள் பிரிவில் தங்கமும், இரட்டையர் பிரிவில் வெள்ளியும், ஒற்றையர் பிரிவில் வெண்கலமும் பெற்றார். தமிழகத்துக்கு பெருமை சேர்த்த சரத்கமல் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் டேபிள் டென்னிஸ் சங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மிகுந்த மகிழ்ச்சி

பயிற்சியாளர்கள், வீரர், வீராங்கனைகள் உள்ளிட்டோர் திரண்டு வந்து சரத்கமலை வரவேற்றனர். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

எனக்கு கிடைத்த இந்த வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவில் டேபிள் டென்னிஸ் விளையாட்டு நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறது. எஸ்.டி.ஏ.டி, சாய், இந்திய டேபிள் டென்னிஸ் சம்மேளனம் ஆகியவற்றின் பங்கு இதில் மிகவும் குறிப்பிடத்தக்கது. சர்வதேச அரங்கில் நம் இந்தியர்களின் திறமை இப்போது நன்றாக வெளிப்பட்டு வருகிறது.

‘லீக்’ போட்டிகளால்...

அதற்கு காரணம் போட்டிகளின் எண்ணிக்கையும், அதில் நம் வீரர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை மேம்ப்படுத்துவதும் ஆகும். ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் நடத்தப்படும் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் ‘லீக்’ போட்டியில் வெளிநாட்டு வீரர்களும் இடம்பிடித்து இந்தியர்களோடு ஆடுவது நமக்கு அதிக அனுபவத்தை தருகிறது.

ஊக்குவிப்பாக...

கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த்தில் 3 பதக்கம் வென்றதால், அடுத்த மாதம் ஸ்வீடன் நாட்டில் நடைபெற இருக்கும் உலக சாம்பியன்ஷிப் டேபிள் டென்னிஸ் போட்டியில் பங்கேற்பதற்கு எனக்கு பெரிய ஊக்குவிப்பாக உள்ளது. உலக தரவரிசையில் தற்போது 48-வது இடத்தில் இருக்கும் நான் காமன்வெல்த் போட்டியின் புள்ளிகள் மூலம் மேலும் முன்னேறக்கூடும். உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் பங்கேற்று டாப் 30க்குள் இடம்பிடிப்பதே எனது அடுத்த இலக்காகும். இவ்வாறு சரத்கமல் கூறினார்.

இரண்டு தங்கம்...

சரத்கமல் சென்னை நேரு ஸ்டேடியத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி ஏ.கே.ஜி. டேபிள் டென்னிஸ் மையத்தில் பயிற்சியாளர்களான தனது தந்தை சீனிவாசராவ், சித்தப்பா முரளீதர்ராவிடம் பயிற்சி பெற்று வருகிறார். 2006-ம் ஆண்டு மெல்போர்னில் நடந்த காமன்வெல்த்தில் அவர் ஒற்றையர் மற்றும் அணிகள் பிரிவு என இரண்டு தங்கம் வென்றார். 2010 டெல்லியில் நடந்த காமன்வெல்த்தில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் தங்கமும், அணிகள் பிரிவில் வெண்கலமும் பெற்றார். தற்போது கோல்டு கோஸ்டில் 3 பதக்கம் பெற்றதன் மூலம் 35 வயதான சரத்கமல் காமன்வெல்த்தில் ஒட்டுமொத்தமாக 7 பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து