முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணு ஆயுத சோதனை இனி இல்லை வட கொரியா அறிவிப்பு அமெரிக்கா வரவேற்பு

சனிக்கிழமை, 21 ஏப்ரல் 2018      உலகம்
Image Unavailable

சியோல்: அணு ஆயுத சோதனையை இனிமேல் நிறுத்தப் போவதாக வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது.

வடகொரியாவின் தொடர் ஆணுஆயுத சோதனை காரணமாக தென் கொரியாவுக்கும், வடகொரியாவுக்கும் கடந்த இரு ஆண்டுகளாக மோதல் போக்கு இருந்து வந்தது. அமெரிக்கா, தென்கொரியாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் அணு ஆயுத சோதனை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் வடகொரியா தொடர்ந்து சோதித்தது. இதையடுத்து வட கொரியாவுக்கு எதிராக அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது. ஐ.நா.வும் பொருளாதார தடைகளை விதித்தது.

வடகொரியாவின் அத்துமீறல்களை முடிவுக்குக் கொண்டு வர தென்கொரியா அமெரிக்காவுடன் இணைந்து ராணுவ கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபட்டது. இதன் காரணமாக கொரிய தீபகற்பப் பகுதியில் பதட்டம் நிலவி வந்தது. இந்த நிலையில், தென் கொரியாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் தங்கள் நாடும் பங்கேற்க விரும்புவதாக வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்தார்.

இது, தென் கொரியா மட்டுமல்லாமல் உலக நாடுகள் அனைத்தையும் வியப்பில் ஆழ்த்தியது. மேலும் இது தொடர்பான பேச்சுவரத்தையில் தங்கள் நாட்டு அதிகாரிகளை அனுப்ப தயாராக உள்ளதாக வடகொரியா கூறியது. இதற்கு தென் கொரியா தரப்பிலும் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தென் கொரியா - வடகொரியா இடையே இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் நேரடி பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது.

இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையே பதட்டம் தணிக்கப்பட்டு இடைவெளி குறைய நடவடிக்கை எடுக்கப்பட்டது. வடகொரியாவின் இந்த மாற்றத்தை உலக நாடுகளும் வரவேற்று வருகின்றன. இணக்கமான போக்கை வடகொரியா கடைப்பிடிக்க தொடங்கியது. அமெரிக்காவுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் விருப்பம் தெரிவித்தார்.

கிம் ஜோங் உன்னை சந்திக்க தயார் என கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். ஜூன் மாதம் இந்த சந்திப்பு நடைபெறும் என தெரிகிறது. இந்த நிலையில், அணு ஆயுத சோதனை, கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய ஏவுகணை சோதனையை நிறுத்துவதாக வட கொரியா அறிவித்துள்ளது. அணு ஆயுத சோதனை முற்றிலும் நிறுத்தப்படும் என அறிவித்துள்ள அதிபர் கிம் ஜோங் உன், அணு ஆயுத சோதனை தளத்தை மூடவும் உத்தரவிட்டுள்ளார். இந்த முடிவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வரவேற்பு தெரிவித்துள்ளார். வட கொரியாவின் அறிவிப்பு அந்நாட்டுக்கு மட்டுமின்றி உலக நாடுகளின் வளர்ச்சிக்கு உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து