முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வைர ஊழல் குறித்த ஆதாரங்களை வழங்க ஜிம்பாப்வே முன்னாள் அதிபர் முகாபேவுக்கு பார்லி. குழு சம்மன்

சனிக்கிழமை, 21 ஏப்ரல் 2018      உலகம்
Image Unavailable

ஜிம்பாப்வே: ஜிம்பாப்வேயின் முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபேவுக்கு அந்நாட்டு நாடாளுமன்ற குழு சம்மன் அனுப்பியுள்ளது.

தென்னாப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வே, பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த போது விடுதலைக்காகப் போராடிய முக்கியத் தலைவர்களில் ஒருவர் ராபர்ட் முகாபே. 1980-ம் ஆண்டில் அந்நாடு சுதந்திரமடைந்ததற்கு பிறகு அதிபர் பதவியை ஏற்ற முகாபே, தொடர்ந்து 37 ஆண்டுகளாக அந்த அரியணையை தனது கட்டுப்பாட்டில் ஆக்கிரமித்து வைத்திருந்தார்.

இந்நிலையில், சமீப காலமாக அவரது செயல்பாடுகள் அனைத்தும் சர்வாதிகாரப் போக்குடனும், ஊழல் மயமாக இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில், எமர்சன் நங்கக்வா அடுத்த அதிபராக பொறுப்பேற்க வேண்டிய நிலையில், தனது மனைவி கிரேஸுக்கு அந்தப் பொறுப்பை வழங்க அவருக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து வந்ததாக முகாபே மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதற்கு வசதியாக, நங்கக்வாவை பதவி நீக்கம் செய்தது உள்பட முகாபே மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் மக்கள் மத்தியிலும், அவரது ஆதரவாளர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து, அவரை சிறைபிடித்த ராணுவம், வீட்டுக்காவலில் வைத்தது. மேலும், அதிபர் பதவியில் இருந்து அவர் விலக வேண்டும் என்று ஆளும் ஜிம்பாப்வே ஆப்பிரிக்க தேசிய யூனியன் கட்சி நிர்பந்தித்து வந்தது. ஆனால், அதற்கு முகாபே மறுப்பு தெரிவிக்கவே, அவரை தகுதிநீக்கம் செய்ய அக்கட்சி முடிவு செய்திருந்தது.

இத்தகைய நெருக்கடியான சூழலில் முகாபே தாமாக முன்வந்து பதவி விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து அவர் மீதான வைர ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க நாடாளுமன்ற குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு தற்போது முகாபேக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அந்த சம்மனில், வைர ஊழல் தொடர்பான ஆதாரங்களை நாடாளுமன்ற குழுவிடம் மே 9-ம் தேதி முகாபே அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுரங்க மற்றும் எரிசக்தி துறை நாடாளுமன்ற குழு தலைவர் டெம்பா மிலிஸ்வா கூறுகையில், முகாபே ஆட்சிக் காலத்தின் போது 1500 கோடி டாலர் மதிப்பிலான வைரங்கள் காணாமல் போனது குறித்து முகாபே நாடாளுமன்ற குழுவிடம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து