முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

சனிக்கிழமை, 21 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: 12வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிப்பதற்கான அவசரச்சட்டத்துக்குப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. அதன்படி இனிமேல் 12வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தாலோ அல்லது கூட்டு பலாத்காரம் செய்தாலோ அவர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்க நீதிமன்றத்தால் முடியும்.

காஷ்மீர் மாநிலம், கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி கூட்டுப்பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். அதே போல, உத்தரப்பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தில் பாஜக எம்எல்ஏ உள்ளிட்ட 5 பேரால் மைனர் பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டார். மேலும், சூரத் நகரில் 11-வயது சிறுமி 8நாட்கள் வைத்து பலாத்காரம் செய்யப்பட்டு, உடலில் 87 இடங்களில் காயங்களுடன் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டார். இதே போன்று நாட்டின் பல நகரங்களில் தொடர்ந்து நடந்து வந்தது பெரும் கவலையை அளித்து வந்து, மக்கள் மனதில் ஒருவிதமான அச்சுறுத்தலான நிலையை ஏற்படுத்தி வந்தது. இது சம்பவங்கள் நாடு முழுவதும்பெரும் கொந்தளிப்பையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியது. மேலும், டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவாலும், போஸ்கோ சட்டத்தில் திருத்தம் செய்து, அதில் தூக்கு தண்டனைப் பிரிவை சேர்க்க வலியுறுத்திக் கடந்த 10 நாட்களாக உண்ணாவிரதம் இருந்தார்.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அலாக் அலோக் சிறீவஸ்தவா என்பவர், சிறுமிகளைப் பலாத்காரம் செய்பவர்களுக்குத் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்த பொதுநலன் மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் சார்பில் 12வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கத் திருத்தம் செய்யப்படும் என்ற உறுதிமொழிக் கடிதம், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிடம் அளிக்கப்பட்டது.

ஐரோப்பிய பயணத்தைக் முடித்துக்கொண்டு பிரதமர் மோடி நேற்று டெல்லி வந்தபின் மத்தியஅமைச்சரவைக் கூட்டம் அவசரமாகக் கூட்டப்பட்டது. அந்தக் கூட்டத்தில், 12வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை விதிக்கும் அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காக இந்திய குற்றப்பிரிவு சட்டம், சி.ஆர்.பி.சி விதிமுறைகள், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை காக்கும் போக்சோ சட்டம் ஆகியவற்றில் திருத்தம் கொண்டு வந்து தூக்குத் தண்டனை என்ற புதிய திருத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

மேலும், இந்த மத்தியஅமைச்சரவைக் கூட்டத்தில் பாலியல் பலாத்காரங்கள் தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரிக்கவும், சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாமல், தற்போது பலாத்கார வழக்குகளுக்கு 7 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை மட்டும் தண்டனை விதிக்கப்படுகிறது. இனிமேல், அது வாழ்நாள் சிறைத்தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது.

16வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு குறைந்தபட்ச சிறை தண்டனை 10 ஆண்டுகளாக முன்பு இருந்தது. அது இனி 20 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், இதை வாழ்நாள் சிறை தண்டனையும், சாகும் வரை சிறையில் இருக்கவும் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது. 12 வயத்துக்கு கீழ்ப்பட்ட குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு குறைந்தபட்ச சிறை தண்டனை 20 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதைக் குற்றத்தின் தீவிரத்துக்கு ஏற்ப வாழ்நாள் சிறை, அல்லது மரண தண்டனை அளிக்கலாம். அனைத்துவிதமான பாலியல் பலாத்கார வழக்குகளையும் 2 மாதங்களுக்குள் விசாரித்து முடிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேசமயம், மேல்முறையீட்டுக்குச் செல்லும் போது, 6 மாத காலத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும்.

பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு ஜாமீன் வழங்குவதிலும் கடும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. 16வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தல் அல்லது கூட்டுப்பலாத்காரக் குற்றச்சாட்டில் சிக்குபவர்களுக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது. 16வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் சிக்குபவர்களுக்கு ஜாமீன் வழங்குவது குறித்து அரசு தரப்பு வழக்கறிஞருக்கும், குற்றச்சாட்டில் சிக்கியவரின் வழக்கறிஞருக்கும் 15 நாள் நோட்டீஸ் கால அவகாசம் அளிக்கும்.  பலாத்கார குற்றங்களை விசாரிக்க தனியாக விரைவு நீதிமன்றங்களை மாநில அரசுகளுடன், யூனியன் பிரதேசங்களுடன், ஐகோர்ட்டுகளுடன் கலந்தாய்வு செய்து உருவாக்குதல்.

பலாத்கார வழக்குகளுக்காக வாதாடும் அரசு தரப்பு வழக்கறிஞர்களுக்கு புதிய பதவிகளை உருவாக்குதல். அதற்குரிய கட்டமைப்பை நீதிமன்றங்களில் ஏற்படுத்துதல். அனைத்து போலீஸ் நிலையங்களிலும், மருத்துவமனைகளிலும் பலாத்கார வழக்குகளின் போது, ஆதாரங்களைக் கையாள சிறப்பு கருவிகள் கொடுத்தல். குறித்த நேரத்துக்குள் பாலியல் பலாத்கார வழக்குகளை விசாரித்து முடிப்பதற்காகக் கூடுதலாக போலீஸார், மற்றும் நீதிமன்றம், நீதிபதிகள், வழக்கறிஞர்களை நியமித்தல். அனைத்து மாநில,யூனியன் பிரதேசங்களிலும் பலாத்கார வழக்குகளில் புலனாய்வு செய்யச் சிறப்பு தடவியல் ஆய்வகம் அமைத்தல். இந்தத் திட்டம் அனைத்தும் 3 மாதங்களுக்குள் செயல்படுத்துதல்.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் படி பலாத்கார குற்றங்களில் சிக்குவோர், கைதாகுவோர் ஆகியோர் குறித்த பட்டியலைத் தயாரித்தல். இந்தப் புள்ளி விவரங்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுடன் பகிர்ந்து கொள்ளுதல். பலாத்காரத்தில் பாதிக்கப்படும் பெண்கள், சிறுமிகளுக்கு உதவ, கவுன்சிலிங் அளிக்க மாவட்டந்தோறும் சிறப்பு மையங்கள் அமைத்தல் என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அந்த அவசர சட்டத்தில் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து