முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பண மதிப்பிழப்புக்குப்பின் கள்ள நோட்டு புழக்கம் அதிகரிப்பு புலனாய்வு பிரிவு திடுக் தகவல்

சனிக்கிழமை, 21 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் கள்ள ரூபாய் நோட்டுகளின் புழக்கம் அதிகரித்துள்ளதாக புலனாய்வுப் பிரிவு திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளது.

கறுப்புப்பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி உயர் மதிப்புடைய ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்ததுடன் புதிய ரூ.2000, 500, 200 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், பெரும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாயினர். தங்களது ரூபாயை மாற்றுவதற்கும், தங்களுக்குத் தேவையான பணத்தை எடுப்பதற்கும் வங்கிகள் முன்பு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க நேரிட்டது. அப்போது வரிசையில் காத்திருந்த அப்பாவி மக்கள் ஏராளமானோர் உயிரிழந்தனர். நாட்டின் பொருளாதாரம் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பி விடும் என்று சிலர் தெரிவித்திருந்தனர். ஆனாலும் இதுவரை நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை.

இந்நிலையில், உயர் மதிப்புடைய பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், அதிகயளவில் கள்ள நோட்டுகள் பிடிபட்டு வருவதாக மத்திய அரசின் அங்கமான நிதி நுண்ணறிவு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து புலனாய்வு பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிந்தைய நிதியாண்டில், கள்ள ரூபாய் நோட்டுகளின் புழக்கமும், சந்தேகத்திற்குரிய பணப்பரிமாற்றங்களின் அளவு 2015-16 நிதியாண்டை விட, 2016-17 நிதியாண்டில் 480 சதவீதம் அதிகரித்துள்ளது என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முந்தைய நிதியாண்டில் (2015-16) ரூ.4 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பிடிபட்டன. ஆனால் 2016-17 நிதியாண்டில் ரூ.7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுக்கள் பிடிபட்டுள்ளன என்றும் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. ஏற்கனவே, பிரதமர் நரேந்திர மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வி என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், புலனாய்வு பிரிவின் இந்த அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து