முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்சிக்கும், ஆட்சிக்கும் அவப்பெயர் உருவாகி வருகிறது பொதுப் பிரச்சினைகளில் வரம்பு மீறி பேச வேண்டாம் பா.ஜ.க.வினருக்கு பிரதமர் மோடி வாய்ப்பூட்டு

ஞாயிற்றுக்கிழமை, 22 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: நாடு தழுவிய அளவில் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பிரச்சினைகளில் பா.ஜ.க.வினர் தங்கள் இஷ்டத்திற்கு கருத்து தெரிவித்து வருவதால்  நாட்டு மக்களிடம் கட்சியின் மதிப்பு சீர்குலைந்து வருவதாகவும், பொதுப் பிரச்சினைகளில் வரம்பு மீறி பேச வேண்டாம் என்றும் அரைவேக்காட்டுத்தனமாக பேசி ஊடகங்களுக்கு மசாலா அளிக்க வேண்டாம். கேமரா இருப்பதை கவனித்து பேசுங்கள் என்று அக்கட்சியினருக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

சமீப காலமாகப் பெண்களுக்கு, குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் ரீதியான தாக்குதல்கள், கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த வாரத்தில் காஷ்மீரில் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி கூட்டுப்பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார். அதே போல உத்தரப்பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. உள்ளிட்ட 5 பேரால், மைனர் பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த இரு சம்பவங்களும் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதைக் கண்டித்தும், முறையான நீதி வழங்கக்கோரியும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்தச் சம்பவம் குறித்து பிரதமர் மோடி, கண்டனம் தெரிவித்தார். ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜ.க. நிர்வாகிகளும், கட்சி எம்.பி.க்களும் பல்வேறு கருத்துக்களை பேசி வருகின்றனர். இது மத்திய அரசையும், பா.ஜ.க.வையும் சங்கடப்படுத்தி வருகிறது. பா.ஜ.க.வினரின் இந்த கருத்துக்களை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில் பா.ஜ.க.வினர் வாய்க்கு வந்தபடி பேசக் கூடாது என பிரதமர் மோடி கடும் உத்தரவிட்டுள்ளார். நாமோ ஆப் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பா.ஜ.க. எம்.பி.க்களிடம் அவர் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
நாம் தொடர்ந்து தவறுகள் செய்வதன் மூலம் ஊடகங்களுக்கு தீனி போட்டு வருகிறாம். ஊடகங்களின் கேமரா முன்பு நாம் ஏதோ சமூக விஞ்ஞானிகள் போலவும், ஆய்வாளர்கள் போலவும் வார்த்தைகளை கொட்டுகிறோம். இது நம்மை சிக்க வைத்து விடுகிறது. தீவிரவாதம், பாலியல் பலாத்காரம் என எந்த பிரச்சினைகளை எடுத்துக் கொண்டாலும் நாம் வாய் தவறி கூறும் வார்த்தைகள் ஊடகங்களில் ஊதி பெரிதாக்கப்படுகின்றன.

இதை பற்றிய கொஞ்சமும் கவலையின்றி நாம் நமது கருத்துக்களை கூறி வருகிறோம். இதனால் கட்சிக்கும், ஆட்சிக்கும் அவப்பெயர் உருவாகி வருகிறது. எனவே இது போன்ற அர்த்தமற்ற கருத்துக்களை கூறுவதையும், ஆர்வக் கோளாறில் கருத்துக்களை தெரிவிப்பதையும் நாம் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். ஊடகங்கள் அவர்களது பணியை செய்யட்டும். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

சில மாதங்களுக்கு முன்பு, பா.ஜ.க.வினரின் வரம்பு மீறிய பேச்சுக்களால் மத்திய அரசுக்கு தர்ம சங்கடம் ஏற்பட்ட போது இதேபோன்ற உத்தரவை பிரதமர் மோடி பிறப்பித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழகத்திலும் எச். ராஜா, எஸ்.வி. சேகர் போன்றவர்கள் பல்வேறு பிரச்சினைகளில் தங்கள் இஷ்டத்திற்கு கருத்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து