முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பாலைக்குடி பகுதியில்க டல்நீர் 1 கிலோமீட்டர் தூரம் உள்வாங்கியதால் பரபரப்பு

ஞாயிற்றுக்கிழமை, 22 ஏப்ரல் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்-கடல் சீற்றமாக காணப்படும் என்று கடல்சார் தகவல் மையம் அறிவித்திருந்த நிலையில் ராமநாதபுரம் அருகே திருப்பாலைக்குடி கடல் பகுதியில் திடீரென்று கடல் நீர் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    கடலில் ஏற்பட்டுள்ள வெப்பம் காரணமாக கடலில் சீற்றம் அதிகமாக காணப்படும் என்று இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதன்காரணமாக கன்னியாகுமரி முதல் ராமநாதபுரம் வரையிலான கடலோர மாவட்டங்களில் கடல்சீற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டு தேவையான பாதுகாப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதுதவிர, பொதுமக்கள் கடற்கரை பகுதிக்கு பொழுதுபோக்கு உள்ளிட்ட காரணங்களுக்காக செல்லக்கூடாது என்று கண்டிப்பான எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கடற்கரை பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டிருந்தன. கடல்சார் தகவல் மையம் அறிவித்திருந்த எச்சரிக்கை 2 நாட்கள் கெடு முடிவடைந்த நிலையில் ராமநாதபுரம் அருகே திடீரென்று கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் அருகே உள்ள திருப்பாலைக்குடி கடற்கரை பகுதியில் நேற்று பிற்பகலில் திடீரென்ற கடல் உள்வாங்கியது. சிறிது சிறிதாக உள்வாங்கிய கடல் சில நிமிடங்களில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கி சென்றது. இதனால் கடல்நீர் நிறைந்திருந்த பகுதி முழுவதும் மணல் மேடாக காட்சியளித்தது.
    திடீரென்று கடல் இந்த அளவிற்கு உள்வாங்கியதால் அப்பகுதியினர் பதட்டம் அடைந்தனர். ஆனால் சில மணி நேரங்களில் இந்த உள்வாங்கிய கடல் நீர் சிறிது சிறிதாக முன்னேறி வந்து இயல்பு நிலையை அடைந்தது. இதனால் பரபரப்பாக காணப்பட்ட திருப்பாலைக்குடி கடற்கரை பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் அப்பகுதியை சேர்ந்தவர்களும், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்களும் கூட்டம் கூட்டமாக அங்கு சென்று கடல் உள்வாங்கியதை கண்டு ஆச்சர்யமடைந்தனர். கடல் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கியதால் கடற்கரை பகுதியில் இருந்த படகுகள் தவிர கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளும் தரைதட்டி நின்றது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் கடலில் எந்த மாற்றமும் நிகழாத போது திருப்பாலைக்குடி பகுதியில் மட்டும் இவ்வாறு கடல் உள்வாங்கியது அனைவரையும் கலக்கமடைய செய்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள் கூறியதாவது:- சித்திரை, வைகாசி மாதங்களில் வழக்கமாக இந்த பகுதியில் கடல் சிறிதளவு உள்வாங்கி செல்வதும் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதும் வாடிக்கைதான். இருப்பினும் இந்த முறை உள்வாங்கிய தூரம் அதிகமாக இருந்ததால் சந்தேகம் எழுந்துள்ளது. குறிப்பாக கடல்சார் தகவல் மையம் எச்சரித்துள்ள நிலையில் இவ்வாறு உள்வாங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடல்சார் தகவல் மையம் கடல் சீற்றமாக காணப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் கடல் உள்வாங்கி வழக்கமான அலைகள் கூட இல்லாமல் இருப்பதால் இதனை தொடர்ந்து என்ன நடக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து