முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்துக்கு எதிரான சதியை முறியடிப்போம்: ரஷியா, சீனா சூளுரை

செவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2018      உலகம்
Image Unavailable

மாஸ்கோ, ஈரானுக்கும், வல்லரசு நாடுகளுக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தைக் குலைப்பதற்காக நடைபெறும் சதிச் செயல்களை ரஷியாவும், சீனாவும் முறியடிக்கும் என்று ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

ஈரானுடன் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளும், ஜெர்மனியும் கையெழுத்திட்டுள்ள இந்த ஒப்பந்தத்திலிருந்து விலக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுவதைக் குறிப்பிட்டு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சீனா சென்றுள்ள லாவ்ரோவ் அந்த நாட்டுத் தலைநகர் பெய்ஜிங்கில் திங்கள்கிழமை கூறியதாவது:

சர்வதேச சட்ட திட்டங்களை நம்பியே ஐ.நா. செயல்பட்டு வருகிறது. இத்தகைய சட்ட திட்டங்களுக்கு இடையூறு விளைவிக்க சிலர் முயன்று வருகின்றனர்.

ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்ட ஓர் ஒப்பத்தைக் குலைக்கும் சதிச் செயலில் யாராவது ஈடுபட்டால், அந்த முயற்சியை முறியடிக்க வேண்டும் என்பதில் ரஷியாவும், சீனாவும் மிக உறுதியுடன் உள்ளன.

ஈரான் அணுசக்தி ஒப்பந்தம், அண்மை வரலாற்றில் பேச்சுவார்த்தையை மட்டுமே பயன்படுத்தி எட்டப்பட்ட மிகச் சிறந்த சமாதான உடன்படிக்கையாகும்.

அந்த ஒப்பந்தத்தை யாரும் சீர்குலைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார் அவர்.
ஏற்கெனவே, அணு சக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகினால், அணு ஆயுதங்களில் எரிபொருளாகப் பயன்படுத்துவதற்கேற்ற வகையில் யுரேனியத்தை செறிவூட்டும் பணியை மீண்டும் தொடங்குவோம் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தனது அணுசக்தித் திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்ய ஈரானும், அதற்குப் பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்ள வல்லரசு நாடுகளும் ஒப்புக் கொண்டு, இருதரப்பினருக்கும் இடையே ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் கடந்த 2015-ஆம் ஆண்டு மே மாதம் ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஒபாமா அதிபராக இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட கடுமையான முயற்சியின் பலனாக உருவான இந்த ஒப்பந்தம், அமெரிக்கா மேற்கொண்டதிலேயே மிகவும் மோசமான ஒப்பந்தம் என்று தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்து வருகிறார்.

மேலும், தான் ஆட்சிக்கு வந்தால் ஈரானுடான அணுசக்தித் திட்டத்தைக் கைவிடப்போவதாக அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது டிரம்ப் வாக்குறுதி அளித்திருந்தார்.

அதன்படி, ஈரான் அணுசக்தி ஒப்பத்தில் உள்ள குறைபாடுகள் களையப்பட வேண்டும்; அல்லது ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகிவிடும் என்று அண்மையில் டொனால்ட் டிரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து