முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அழகர் கோவில் சித்திரை திருவிழா இன்று தொடங்குகிறது: 28-ம் தேதி மதுரைக்கு கள்ளழகர் தங்கப் பல்லக்கில் புறப்படுகிறார்

புதன்கிழமை, 25 ஏப்ரல் 2018      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை, மதுரையில் மிக முக்கிய திருவிழாவான கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம் வரும் 30-ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி வரும் 28-ம் தேதி மதுரைக்கு கள்ளழகர் தங்கப்பல்லக்கில் புறப்படுகிறார். வழியில் பல மண்டகப்படிகளில் தங்கி அவர் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

28-ம் தேதி தங்கப் பல்லக்கில் புறப்படும் கள்ளழகர் கொண்டப்பநாயக்கர் மண்டபத்தில் இருந்து பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவில் வருகிறார். அங்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. அதன் பிறகு கள்ளழகர் மதுரை நோக்கி புறப்படுகிறார். மறுநாள் 29-ம் தேதி காலை 6 மணிக்கு மூன்றுமாவடியில் எதிர்சேவை நடைபெறுகிறது. இரவில் தல்லாகுளம் பெருமாள் கோவிலில் திருமஞ்சனமாகி திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை பெருமாளுக்கு அணிவிக்கப்படுகிறது. தொடர்ந்து வீதியுலா செல்லும் கள்ளழகர் 30-ம் தேதி திங்கட்கிழமை காலை 5.45 மணிக்கு மேல் 6.15 மணிக்குள் தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார். அதன் பிறகு வண்டியூர் பெருமாள் கோவிலுக்கு செல்லும் கள்ளழகர் தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கிறார். தொடர்ந்து ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அதன்  பிறகு ராஜாங்க திருக்கோலத்தில் 2-ம் தேதியும், 3-ம் தேதி பூப்பல்லக்கிலும் காட்சி தரும் கள்ளழகர் அங்கிருந்து அழகர்கோவிலுக்கு புறப்படுகிறார்.

4-ம் தேதி கள்ளழகர் அழகர் மலைக்கு செல்ல 5-ம் தேதியுடன் விழா நிறைவு பெறுகிறது. இந்த வருடம் சுமார் 435 மண்டகப்படிகளில் அழகர் எழுந்தருள்கிறார். கள்ளழகர் மதுரைக்கு செல்லும் போது பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக 29 உண்டியல் பெட்டிகள் சுவாமியுடன் வருகின்றன. திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் கண்காணிப்பாளர்கள், கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து