முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போலீசாரால் தேடப்பட்ட ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி சரண்: நிர்மலாதேவி மீது மேலும் இரண்டு மாணவிகள் புகார் - உதவி பேராசிரியர் முருகனுக்கு 5 நாள் போலீஸ் காவல்

புதன்கிழமை, 25 ஏப்ரல் 2018      தமிழகம்
Image Unavailable

மதுரை : மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் பேராசிரியை நிர்மலாதேவி  மீது மேலும் 2 மாணவிகள் புகார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் போலீசாரால் தேடப்பட்டுவந்த பல்கலை கழக ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி போலீசில் சரணடைந்துள்ளார். ஏற்கனவே கைது செய்யப்பட்ட துணை பேராசிரியர் முருகனுக்கு 5 நாள் போலீஸ் காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தானம் விசாரணை

அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் குறித்து சி.பி.சி.ஐ.டி போலீசார் 9 குழுக்களாக பிரிந்து விசாரணை நடத்தி ஆதாரங்களை சேகரித்து வருகிறார்கள். இதற்கிடையே கவர்னர் நியமித்த அதிகாரி சந்தானம், கடந்த 18-ம் தேதி முதல் பேராசிரியை குறித்து விசாரித்து வருகிறார். பல்கலை துணைவேந்தர், பதிவாளர் மற்றும் பேராசிரியர்கள், மாணவிகள் என 3 நாட்களாக அதிகாரி சந்தானம் விசாரணை நடத்தினார்.

2 மாணவிகள் புகார்

இந்த நிலையில் நேற்று அவர் தனது 2-ம் கட்ட விசராணையை தொடங்கினார். அப்போது, அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியை சேர்ந்த 2 மாணவிகள் பேராசிரியை நிர்மலா தேவி மீது பரபரப்பு புகார்களை அதிகாரி சந்தானத்திடம் தெரிவித்துள்ளனர். அந்த மனுக்களை மாணவிகளின் சார்பில் மதுரையை சேர்ந்த வக்கீல் முத்துக்குமார் அதிகாரி சந்தானத்திடம் வழங்கினார். இது தொடர்பாகவும் சந்தானம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளார். ஏற்கனவே 4 மாணவிகள் பேராசிரியை மீது புகார் தெரிவித்துள்ள நிலையில்  மேலும் 2 மாணவிகள் புகார் தெரிவித்து இருப்பது இந்த வழக்கில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் பேராசிரியை நிர்மலா தேவியிடமும் விசாரணை நடத்த அதிகாரி சந்தானம் திட்டமிட்டுள்ளார். முறைப்படி அனுமதி பெற்று நிர்மலா தேவியிடம்  அதிகாரி சந்தானம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக தனது உதவியாளர்களுடன் சந்தானம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

முருகன் கைது...

பேராசிரியை நிர்மலாதேவிக்கு உடந்தையாக இருந்ததாக உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் கல்லூரி வருகை பதிவேட்டில் கையெழுத்திட வந்த முருகனை சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் சுற்றி வளைத்து கைது செய்தனர். முருகனிடம் 9 பேர் கொண்ட குழுவினர் 22 மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின், கைது செய்யப்பட்ட பேராசிரியர் முருகனை சிபிசிஐடி போலீஸார் அன்றைய தினமே, சாத்தூர் இரண்டாவது நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி கீதா முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது, முருகனை ஒருநாள் சிறை காவலில் வைக்க நீதிபதி கீதா உத்தரவிட்டார். இதையடுத்து, முருகன் விருதுநகரில் உள்ள கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

கருப்பசாமி சரண்

பேராசிரியர் முருகனை நேற்று கோர்ட்டில் மீண்டும் ஆஜர்படுத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார் 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டில் மனு செய்தனர்.  பேராசிரியர் முருகனை 5 நாள்   சி.பி.சி.ஐ.டி. காவலில் வைத்து விசாரனை நடத்த மாஜிஸ்திரேட்டு கீதா  உத்தரவிட்டார். இந்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்டுவந்த பலக்கலை கழக ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி நேற்று மதுரை மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று காலை சரண் அடைந்தார். அவருக்கு 27-ந் தேதி வரை காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து