முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.2000கோடி சட்டவிரோத பரிமாற்ற புகார் மும்பையைச் சேர்ந்த ஹவாலா தரகர் கைது: அமலாக்கப் பிரிவினர் நடவடிக்கை

வியாழக்கிழமை, 26 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

மும்பை: ரூ.2000 கோடியை சட்டவிரோதமாக பரிமாற்றம் (ஹவாலா) செய்த மும்பையைச் சேர்ந்த ஹவாலா மன்னன் என்று அழைக்கப்படும் முகமது பரூக்கை அமலாக்கப் பிரிவினர் கைது செய்தனர்.

மும்பையைச் சேர்ந்தவர் முகமது பரூக் என்கிற பரூக் ஷேக். ஸ்டெல்கான் இன்பிராடெல் என்கிற தனியார் நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஜவேரி பஜார் பகுதியில் இவரது அலுவலகம் உள்ளது. மேலும் இவர் சட்டவிரோதப் பணப் பரிமாற்றங்களில் ஈடுபட்டு பெரும் பணம் ஈட்டியதாக நீண்ட காலமாக புகார் எழுந்து வந்தது.

இவரை மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர்கள் ஹவாலா மன்னன் என்றே அழைத்து வந்தனர். ரூ.2,253 கோடி அளவுக்கு சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் செய்ததாக புகார் எழுந்ததையடுத்து இவர் அமலாக்கப் பிரிவினரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.

இவர் மீது 2014-ம் ஆண்டு முதலே புகார்கள் இருப்பதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. இவருக்கு மும்பை தாதாக்கள் பலருடனும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது. இதையடுத்து வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் முகமது பரூக் குறித்து புகார் அறிக்கை தயார் செய்து 2016-ம் ஆண்டில் அமலாக்கப் பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து அவர் மீது சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவரிடம் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு சொத்து இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

மேலும் 160 போலி முகவரிகளையும் கொடுத்து பெயரளவில் பல நிறுவனங்களைப் பதிவு செய்துள்ளார். ஒரு நிறுவனத்துக்கு ஆட்டோ டிரைவரையே இயக்குநராக நியமித்து பதிவு செய்யப்பட்டுள்ளது.

தனது வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தைப் பெறுவதற்காக கூட்டுறவு வங்கிகளில் கணக்கை முகமது பரூக் தொடங்கியுள்ளார். வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறும் பணத்தை டெபாசிட் செய்ய கூட்டுறவு வங்கிக் கணக்கை அவர் பயன்படுத்தியுள்ளார். பின்னர் பல்வேறு கட்ட பரிவர்த்தனைகளுக்குப் பிறகு அந்த பணத்தை தன் சொந்த வங்கிக் கணக்குகளுக்கு மாற்றி போலி ஆவணங்கள் மூலம் அவற்றை பட்டுவாடா செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக கைது செய்யப்பட்ட முகமது பரூக்கிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து