முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக மாநிலம் பாதாமி தொகுதியில் சித்தராமையா-ஸ்ரீராமுலு நேருக்கு நேர் மோதல்

வியாழக்கிழமை, 26 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாதாமி தொகுதியில் முதல்வர் சித்தராமையாவும், பா.ஜ.க முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலுவும் நேருக்கு நேர் மோதுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் மே 12-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. காங்கிரஸ், பா.ஜ.க, ம.ஜ.த ஆகிய கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. பா.ஜ.க, ம.ஜ.த ஆகிய கட்சிகளின் தலைவர்கள் முதல்வர் சித்தராமையா எந்த தொகுதியில் நின்றாலும் அவரை தோற்கடிப்போம் என சவால் விடுத்துள்ளனர்.

இதனால் சித்தராமையா தோல்வியை தவிர்க்கும் வகையில், மைசூர் மாவட்டத்தில் உள்ள சாமுண்டீஸ்வரி மற்றும் பாகல் கோட்டை மாவட்டத்தில் உள்ள பாதாமி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளில் சித்தராமையா ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் பேரணியாக சென்று பாதாமியில் மனு தாக்கல் செய்தார்.

இதையடுத்து, பா.ஜ.க மேலிடம் பாதாமி தொகுதியில் சித்தராமையாவை எதிர்த்து முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலு போட்டியிடுவார் என அறிவித்தது. அடுத்த சில மணி நேரத்தில் பா.ஜ.க மாநில தலைவர் எடியூரப்பா, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் ஆகியோருடன் வந்து ஸ்ரீராமுலு வேட்பு மனுவை தாக்கல் செய்தார். சித்தராமையாவும் ஸ்ரீராமுலுவும் நேருக்கு நேர் மோதுவதால் அந்த தொகுதி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதுகுறித்து பா.ஜ.க வட்டாரத்தில் விசாரித்தபோது, “பாதாமி தொகுதியில் கணிசமாக வாழும் வால்மீகி வகுப்பினரின் செல்வாக்கையும், பெல்லாரி ரெட்டி சகோதரர்களின் ஆதரவையும் பெற்ற ஸ்ரீராமுலு சித்தராமையாவை வீழ்த்துவார் என பா.ஜ.க மேலிடம் கருதுகிறது. அதனால் வேறு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்த ஸ்ரீராமுலுவை இந்த தொகுதியில் நிறுத்தியுள்ளது” என்றனர்.

சாமுண்டீஸ்வரி தொகுதியில் சித்தராமையாவை வீழ்த்துவதில் ம.ஜ.த முதல்வர் வேட்பாளர் குமாரசாமியும், எடியூரப்பாவின் மகன் விஜேந்திராவும் தீவிரமாக உள்ளனர். எனவே சித்தராமையா சிறுபான்மையினர் கணிசமாக வாழும் பாதாமி தொகுதியை தேர்ந்தெடுத்தார். இப்போது அந்த தொகுதியில் ஸ்ரீராமுலு போட்டியிடுவதால் சித்தராமையா அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து சித்தராமையா கூறியபோது, “நான் மக்களை நம்பி களமிறங்கி இருக்கிறேன். அவர்கள் என்னை கைவிட மாட்டார்கள்” என்றார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து