முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.கவுக்கு எதிராக தேசிய அளவில் மகா கூட்டணி: அஜித் சிங் வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 26 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

அலிகார்: 2019ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவின் தோல்வியை உறுதி செய்வதற்கு, தேசிய அளவில் மகா கூட்டணியை எதிர்க்கட்சிகள் அமைக்க வேண்டும் என்று ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சித் தலைவர் அஜித் சிங் வலியுறுத்தியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம், அலிகாரில் செய்தியாளர்களை சந்தித்தபோது, இதுகுறித்து அவர் கூறியதாவது:
மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசானது, அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்து விட்டது. குறிப்பாக, விவசாயிகள் பிரச்னை, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகிய விவகாரங்களில் தோல்வியடைந்து விட்டது. மத்திய அரசின் தோல்வியின் காரணமாக, உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 170 பொறியியல் கல்லூரிகள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டன. இதற்கு பொறியியல் படிப்போருக்கு போதிய வேலைவாய்ப்பு இல்லை என்பதே காரணமாகும்.

தேர்தலின்போது சர்க்கரை, கோதுமை விவசாயிகளுக்கு குறைந்தப்பட்ச ஆதார விலை வழங்கப்படும் என பா.ஜ.க வாக்குறுதி அளித்திருந்தது. அந்த வாக்குறுதியை பா.ஜ.க பூர்த்தி செய்யவேயில்லை. குறைபாடுகளைக் கொண்ட பாஜகவின் கொள்கைகளால், உத்தரப் பிரதேசத்தின் மேற்குப் பகுதி பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளது.

பொது செயல் திட்டத்தின் அடிப்படையில், ஒரே அணியில் எதிர்க்கட்சிகள் வரக் கூடாது என்பதற்காக பாஜகவில் உள்ள தேர்தல் நிபுணர்கள் வகுத்திருக்கும் திட்டங்களில் எதிர்க்கட்சிகள் சிக்கி கொள்ளக் கூடாது. அவ்வாறு எதிர்க்கட்சிகள் சிக்குமானால், அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

2019ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பா.ஜ.கவின் தோல்வியை உறுதி செய்ய எதிர்க்கட்சிகள் தங்களிடையேயான கருத்து வேறுபாடுகளை மறந்து கரம் கோர்க்க வேண்டும். தேசிய அளவில் மகா கூட்டணியை அமைத்து, 2019ஆம் ஆண்டு தேர்தலில் வாட்டர்லு யுத்த நிலையை பா.ஜ.க எதிர்கொள்ளச் செய்ய வேண்டும்.

நாடு முழுவதும் மக்களிடயே பா.ஜ.க அரசுக்கு எதிரான அலை வீசுகிறது. எனவே தேர்தலில் பா.ஜ.கவுக்கு எதிரான வாக்குகள் சிதறாமல் இருப்பதை உறுதி செய்து, அக்கட்சியின் தோல்வியை எதிர்க்கட்சிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்றார் அஜித் சிங்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து