இன்று சித்ரா பௌர்ணமி சித்ரகுப்தனை வணங்கி நலம் பெறுவோம்

திங்கட்கிழமை, 30 ஏப்ரல் 2018      ஆன்மிகம்
chitragupta

Source: provided

பஞ்ச பூதங்களாலேயே உலகம் இயங்குகிறது. இந்த பஞ்சபூதங்களை இயக்கும் மஹா மந்திரம் நமசிவாய எனும் ஸ்ரீ சிவபஞ்சாட்சர மஹா மந்திரம். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து இறையருள் தொழில்களை தமது நமசிவாய என்ற பஞ்சாட்சர தாரக மந்திரத்தின் மூலம் நவக்கோள்களையும், நட்சத்திரங்களையும் காலச்சக்கரத்தின் நியதிப்படி நடத்தி வருபவரே ஆதிசிவன், இவரே அனைத்து ஐஸ்வர்யங்களையும் உலக மக்களுக்கு வழங்குகிறார். எனவே உலக நன்மைக்காக அனைவரும் நவக்கோள்களில் நன்மை பெற்று சகல ஐஸ்வரியமும், ஸ்ரீ லட்சுமி கடாட்சமும், ஸ்ரீ சிவ கடாட்சமும் பெற்று நலமுடன் வாழ சித்ரா பௌர்ணமி அன்று (இன்று) ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் வாயுலிங்கம் அருகே உள்ள நமசிவாய ஆசிரம அன்னதான தருமசாலையில் ஸ்ரீ சிவபஞ்சாட்சர மஹா வில்வயாகம் மற்றும் மஹா சுதர்சன யாகம் நடைபெற உள்ளது.

வில்வம் சிவனுக்கு மிகவும் விருப்பமானது. வில்வ இலைகளில் மகாலட்சுமி எழுந்தருளியிருக்கிறாள். சிவனே கிரியாக விளங்கும் அண்ணாமலையில் செய்யும் ஸ்ரீ சிவபஞ்சாட்சர மஹாவில்வ யாகம் சிவகடாட்சத்தையும், லஷ்மி கடாட்சத்தையும், மஹா விஷ்ணுவின் அருளினையும் தரும். வில்வத்தில் லட்சுமி வாசம் செய்கிறார். ஒரு வில்வத்தளம் (இலை) லட்சம் ஸ்வர்ண புஷ்பத்திற்கு சமம், ஒரு வில்வத்தளத்தை (இலை) சிவனுக்கு அர்பணித்தால் மகா பாவங்கள் எல்லாம் விலகி சகல சவுபாக்கியங்களும், நவகிரகங்களால் நற்பலன்களும் உண்டாகும். வில்வ இலை மூன்று இலைகளாக காட்சியளிப்பதால் அதற்கு இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி என்று மூன்று வகை சக்திகளாக வில்வ இலை பாவிக்கப்பட்டு யாக பூஜையில் சிவனுக்கு (இறைவன்) சமர்ப்பணம் செய்யப்படுகிறது.

காசியிலும், இராமேஸ்வரத்திலும் சிவதரிசனம் செய்த புண்ணியம் சித்ரா பௌர்ணமியன்று செய்யும் ஸ்ரீ சிவபஞ்சாட்சர மஹா வில்வ யாகத்தின் மூலம் கிடைக்கும். மேலும் அசுவமேத யாகம் செய்த பலனும் லட்சம் பேருக்கு அன்னதானம் செய்த புண்ணியமும் நவக்கிரகங்களின் நன்மையும் கிடைக்கும். மஹா விஷ்ணுவின் மஹா சுதர்சன யாகம் உடல் பலத்தையும், மன பலத்தையும் காத்து லட்சுமி கடாட்சமும், குபேர சம்பத்தும் அளிக்கும். ஐஸ்வர்யம் அபிவிருத்தி அடையச் செய்வதே ஸ்ரீ மஹா சுதர்சன யாக பூஜை. மஹா விஷ்ணுவின் சுதர்சன யாக பூஜை, சித்ரா பௌர்ணமி அன்று செய்வதால் மகிழ்ச்சி மட்டுமல்லாமல், செல்வமும் சேரும், புகழ் கிடைக்கும். கல்வி மேன்மை பெரும், கடன் அடைபடும், பொருளாதார சிக்கல் தீரும், சத்ரு பயம் நீங்கி சத்ரு நிவர்த்தி உண்டாகும். நோய்கள் குணமடையும், சகல வெற்றியும் உண்டாகும்.

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சிவபஞ்சாட்சர மஹா வில்வயாகத்தை தொடர்ந்து அஷ்டத்திக்கு பாலகர்களின் அஷ்டலிங்க மஹாயாகம் நடைபெறும். கோச்சார முறையில் சஞ்சரிக்கும் ஒரு கிரகம் சுப பலன்களை தரக்கூடியதாக இருந்த போதிலும் அச்சமயத்தில் அக்கிரகத்தினால் எவ்வித பலனுமில்லை என்ற நிலை ஏற்பட்டால், கிரகம் நின்ற அஷ்டதிக்கு பாலகர் எவரோ அவரை வழிபட சுப பலன்கள் ஏற்படுவது மட்டுமல்லாமல் அசுப கிரகங்களினால் ஏற்படும் தீய பலன்களை அகற்றி சகல நன்மைகளும் உண்டாகும்.

பசிக்கு உணவளிப்பதால் வரும் பலன்கள் பற்றி வள்ளல் ராமலிங்க பெருமான் கூறுகையில். குழந்தையில்லாது வருந்துகின்ற அன்பர்கள் தங்கள் தரத்திற்கு ஏற்றபடி பசித்தவர்கட்கு பசியாற்றுவதே விரதமாக அனுசரிப்பார்களானால், அந்த சீவகாருண்ய அணுசரிப்பே அழகும், அறிவும் உடைய சந்ததியை உண்டு பண்ணும் என்பது உண்மை. தீராத வியாதியினால் வருந்துகின்ற அன்பர்கள் பசித்த சீவர்கட்கு பசியாற்றுவதையே விரதமாக அனுசரிப்பார்களானால், அந்த சீவகாருண்ய அனுசரிப்பே தீராத வியாதிகளைத் தீர்க்கும் என்பது உண்மை. அற்ப வயதென்று குறிப்பினால் அறிந்து கொண்டு இறந்து போவதற்கு அஞ்சி விசாரப்படுகின்ற அன்பர்கள், பசித்தவர்கட்கு பசியாற்றுவிப்பதே விரதமாக அனுசரிப்பார்களானால், அந்த சீவகாருண்ய அனுசரிப்பே தீர்க்காயுளை உண்டு பண்ணும் என்பது உண்மை. கல்வி போகம், செல்வம் இவைகளில்லாது வருந்துகின்ற அன்பர்கள், பசித்த சீவர்கட்கு பசியாற்றுவிப்பதே விரதமாக அனுசரிப்பார்களானால், அந்த சீவகாருண்ய அனுசரிப்பே, கல்வி, செல்வம், போகம் முதலியவைகளை உண்டுபண்ணும் என்பது உண்மையென்று விளக்குகிறார் வள்ளல் பெருமானார்.

வாழ்வில் சிறப்பு சேர்க்கும் சித்ரா பவுர்ணமி : சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரம் இணைந்த நாளில் வரும் பவுர்ணமி தினம், புராண நிகழ்வுகளின் நினைவாக சிறப்பைப் பெறுகிறது. மற்ற பவுர்ணமிகளில் சிறு களங்கத்துடன் தோன்றும் சந்திரன், சித்திரா பவுர்ணமியன்று, பூரணக் கலைகளுடன் பூமிக்கு மிக அருகில் தோன்றும். சந்திரனும், சூரியனும் முழு நீசம் பெற்ற இந்த நாளில், நாம் தெய்வங்களிடம் சரணடைந்து வழிபடுவது நன்மைகளைத் தரும் என்பது ஐதீகம்.

சித்திரகுப்தனை வழிபடும் நாள்: மனிதர்களின் பாவ புண்ணியங்களை எழுதி வைத்து அதற்கேற்றார் போல், அவர்களின் இறப்பையும் அதன்பின் அவர்கள் வசிக்கப் போகும் சொர்க்கம் - நரகம் ஆகியவற்றை நிர்ணயிக்கும் பெரிய பொறுப்பில் உள்ள எம தர்மனின் உதவியாளரான சித்திரகுப்தனை வழிபடும் நாள்தான் இந்நாள். சித்ரகுப்தனின் பிறப்புக் குறித்து பல்வேறு புராண சம்பவங்கள் விவரிக்கப்பட்டாலும் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிகழ்வாக இக்கதையே பெரும்பாலும் உள்ளது.

கயிலாயத்தில் ஒருநாள் அன்னை பார்வதி தேவி, பொழுதுபோக்காக ஒரு அழகிய ஆண் குழந்தையின் வடிவத்தை சித்திரமாக வரைந்து மகிழ்ந்தாள். அதே நேரத்தில் எல்லாம் வல்ல ஈசனிடம், விதி முடிந்த மனிதரின் உயிரைப் பறித்து பூமி மாதாவின் பாரத்தைக் குறைக்கும் பணியில் உள்ள எமதர்மன், அதிக வேலைப் பளு காரணமாகத் தான் அவதிப்படுவதாகவும், தனக்கு ஏற்ற சிறந்த உதவியாளரைத் தரும் படியும் வேண்டினான்.

அப்போது தான் ஈசனிடம் தான் வரைந்த ஓவியத்தைக் காட்டினாள் அன்னை உமாதேவி. அழகில் சிறந்த அந்த ஆண் குழந்தையின் ஓவியம், ஈசனின் மனதை மயக்கியது. அந்நேரம் எமனின் வேண்டுகோள் நினைவில் தோன்ற, அவ்வோவியத்தைக் கையில் எடுத்த இறைவன் தன் மூச்சுக் காற்றை அவ்வோவியத்தில் செலுத்த, ஓவியத்தில் இருந்த குழந்தை உயிர் பெற்று வந்தது. சிவசக்தியின் அம்சமாக உருவான அக்குழந்தை சித்திரத்தில் இருந்து உயிர் பெற்றதால் ‘சித்ர குப்தன்’ எனப்பெயர் பெற்று ஈசனை வேண்டித் தவமிருந்து பல ஞானங்களைப் பெற்று வளர்ந்தது.

கல்வி வேள்விகளில் சிறந்தவன் ஆன சித்ரகுப்தனை தகுந்த வயதில் எமதர்மனிடம் அனுப்பி, மனிதர்களின் பாவப்புண்ணிய கணக்குகளை நெறி தவறாமல் எழுதி, எமனுக்கு உதவி செய்யும்படி பணித்தார் சிவபெருமான் என்கிறது புராணம்.

‘சித்’ என்றால் ‘மனம்’ என்றும், ‘குப்த’ என்றால் ‘மறைவு’ என்றும் பொருள். மனிதர்களின் மனதில் மறைந்திருக்கும் பாவ எண்ணங்களையும் மனதார செய்யும் நல்ல செயல்களின் புண்ணியத்தையும் கவனித்து எழுதி வைக்கிறார் சித்ரகுப்தர் என்பது நம்பிக்கை.

மனிதரின் பாவ புண்ணியக் கணக்குகளை எழுதும் பணிக்காக இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட சித்திரகுப்தன், பிறக்கும்போதே கையில் எழுத்தாணி ஏடுடன் பிறந்ததாக ஐதீகம். நாம் செய்யும் புண்ணிய செயல்களையும் பாவ செய்களையும் தவறாமல் நடுநிலையாக, அவரவரின் பூர்வ புண்ணியங்களின் படி ஆராய்ந்து மறையாத எழுத்துக்களால் கணக்குப் புத்தகத்தில் எழுதுவதாக நம்பிக்கை. ஆகவேதான் அன்று சித்திரகுப்த பூஜையில் எழுத்தாணி மற்றும் கணக்கு நோட்டுப் புத்தகங்கள் வைத்து வாழ்வு வளம் பெற வேண்டுகின்றனர்.

சித்திரா பவுர்ணமியன்று பூஜையறையை சுத்தம் செய்து, சித்ரகுப்தன் படத்தை தெற்கு திசையில் வைத்து பூக்களால் அலங்கரிக்க வேண்டும். பின்னர் சந்தனப் பொட்டு வைத்து பழங்கள், காய்கறிகள், வேப்பம்பூ பச்சடி, பச்சரிசி வெல்லத்துடன் இனிப்புகள் மற்றும் கலவை சாதங்களை நைவேத்தியமாகப் படைக்க வேண்டும். ஐந்து முகம் கொண்ட குத்து விளக்கு ஏற்றி மனதில் உள்ள தீய எண்ணங்களை விலக்கி நல்ல எண்ணங்களை புகுத்தி தீப தூபம் காட்டி சித்ரகுப்தனை மனதார வழிபட வேண்டும்.

சித்ரா பவுர்ணமியன்று களங்கமில்லாத முழு நிலவின் அழகைக் கண்டு ரசிக்க, கடற்கரை பூங்கா போன்ற இடங்களில் மக்கள் ஒன்று கூடுவார்கள் அவரவர் வீடுகளில் செய்த ‘சித்ரா அன்னம்’ எனப்படும் கலவை சாதங்களை எடுத்து வந்து, நிலாச்சோறு உண்ணும் வழக்கம் குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமையையும் அன்பையும் பெருக வைக்கும் என்பதால் நம் பெரியோர்கள் கடைப்பிடித்த நல்வழி இது.

சித்ரா பவுர்ணமியின் சிறப்புகளாக பல ஆன்மிக வழிபாடுகளும் பூஜைகளும் ஆலயங்கள் தோறும் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக மதுரையில் அன்று கள்ளழகர் ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு தரிசனம் தருவது ஆண்டுதோறும் நிகழும் சிறப்புமிக்க வைபவமாகிறது. கன்னியாகுமரியில் அன்று மட்டும் ஒரே நேரத்தில் சூரியன் மறைவதையும் சந்திரன் தோன்றுவதையும் கண்டு மகிழலாம். திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் நிகழ்வு பிரசித்தி பெற்றதாக இருக்கிறது.

இந்த தினத்தில் சித்ரகுப்தனை வேண்டி வருட பலாபலன்களை அறிந்து கொள்ளும் பஞ்சாங்கம் படிப்பதும், கடல் நீரில் நீராடுவதும் வாழ்வில் சுபீட்சத்தை அருளும். அன்றைய தினம் சித்ராதேவிக்கு (அம்பிகை) தேங்காய் சாதம், புளியோதரை, எலுமிச்சை சாதம், தயிர்சாதம், பருப்புப் பொடி சாதம், கறிவேப்பிலைப் பொடி சாதம், மாங்காய் சாதம், வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், அரிசி உப்புமா, அவல் உப்புமா, கோதுமை உப்புமா ஆகியவைகளைப் படைத்து அவற்றை பசித்தோருக்கு தானமாகத் தந்து புண்ணியம் பெறலாம்.

சித்ரா பௌர்ணமி அன்று செய்யும் அன்னதானத்தால் கிடைக்கும் பலன்கள் வருமாறு:
•அன்னதானம் அளிப்பவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கிறது.

•அன்னாரது குடும்பத்தின் அங்கத்தினர்களுக்கும் நீண்ட ஆயுள் கிடைக்கிறது.

•அன்னதானம் செய்பவருடைய மன வருத்தங்கள் குறைந்து சந்தோஷம் உண்டாகும்.

•அன்னதானம் செய்பவருடைய குடும்ப வாரிசுகள் அன்னாரது அறிவுத்திறன் வளர்ச்சியடையும்.

•அன்னதானம் செய்பவர் மிகுந்த பிரபலம் அடைவர்.

•அன்னதானம் செய்பவருக்கும், அன்னாரது குடும்பத்தைச் சார்ந்தவருக்கும் உடல்பலம் ஆத்மபலம் விருத்தியாகும்.

•அன்னதானம் செய்பவருக்கு அரசியல் வாழ்க்கையில் உயர்வு உண்டாகும்.

தொகுப்பு: அர்ச்சகர் சுப்பிரமணி, சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் கோவில்.
தொகுப்பு: ஜஸ்டின்,

Seema Raja - Movie Review | Sivakarthikeyan | Samantha | keerthy suresh

Seema Raja | Public Review Opinion | சீமராஜா திரைப்படம் ரசிகர்கள் கருத்து

Kozhukattai Recipe in Tamil | Modak Kolukattai Recipe in Tamil | Pooranam Recipe | Sweet Kolukattai

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து