அடைக்கலம் தேடி வந்த பெண்ணை காப்பாற்ற 36 புதுத்தம்பதிகள் வீரமரணம் அடைந்த கட்ராம்பட்டி தாத்தகாரு வீரக்கோவில்

திங்கட்கிழமை, 7 மே 2018      ஆன்மிகம்
36 jodi veera maranam

Source: provided

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சியின் போது சாப்டூரை தலைமையிடமாக கொண்டு ஜமீன்தார்களின் நிர்வாகம் இருந்து வந்துள்ளது. அப்போது பருவமடையும் கன்னிப்பெண்களை சேவகம் செய்வதற்காக ஜமீன்தார்களிடம் ஒப்படைப்பது வழக்கமாக இருந்து வந்துள்ளது. இந்த விஷயத்தில் யாருக்கும் விதிவிலக்கு இல்லாத நிலையில் ஏழை ஒருவரின் மகள் பருவமடைந்த தகவல் ஜமீன்தாருக்கு சென்றுள்ளது. இதையடுத்து அரண்மனை காவலர்கள் அந்த ஏழையின் மகளை அழைத்து வரச் சென்றுள்ளனர். அப்போது தனது மகளை அரமண்மனைக்கு அனுப்பிட மனமில்லாத அந்த ஏழை தனது மகள் மற்றும் குடும்பத்தினருடன் ஜமீனை விட்டு வெளியேறி ஒவ்வொரு கிராமம் கிராமமாக தஞ்சம் கேட்டு கால்நடையாக சென்றுள்ளார்.

ஜமீன்தாரின் கோபத்திற்கு ஆளாகிட நேரிடும் என எண்ணி பலரும் அடைக்கலம் கொடுக்க மறுத்து விட்டனர். இதனால் மனமுடைந்த அந்த ஏழை தனது மனம் போன போக்கில் நடந்து சென்று கடைசியாக திருமங்கலம் அருகேயுள்ள கட்ராம்பட்டி எனும் கிராமத்தில் தஞ்சம் கேட்டுள்ளார். அன்றைய காலகட்டத்தில் கட்ராம்பட்டி கிராமம் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு சொந்தமான 48 கிராமங்களின் தாய் கிராமமாக திகழ்ந்து வந்துள்ளது. மேலும் இந்த சமுதாயத்திற்கு சொந்தமான 48 கிராமங்களைச் சேர்ந்தவர்களும் திருமணம் முடிக்க வேண்டுமென்றால் தங்களது தாய் கிராமமான கட்ராம்பட்டியில் வந்து திருமணம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தனராம். கட்ராம்பட்டி கிராமத்திற்கு வந்து சேர்ந்த அந்த ஏழையின் குடும்பத்தினருக்கு  கிராமமக்கள் அடைக்கலம் கொடுத்துள்ளனர். மேலும் தங்களது உயிரே போனாலும் கட்ராம்பட்டியை நம்பி வந்த அந்த கன்னிப்பெண் மற்றும் அவரது குடும்பத்தினரை காட்டிக் கொடுக்காமல் காப்பாற்றுவது என்றும் சபதம் மேற்கொண்டுள்ளனர்.

இதனிடையே அந்த கன்னிப் பெண்ணை சிறைபிடித்து கொண்டு வருமாறு சாப்டூர் ஜமீனிலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட வீரர்கள் ஒவ்வொரு கிராமமாக தேடியும் அந்த கன்னிப் பெண் கிடைக்காததால் கடைசியாக கட்ராம்பட்டி கிராமத்திற்கு வந்து விசாரித்தனர். அப்போது யாரும் அந்த கன்னிப்பெண்ணை வீரர்களிடம் காட்டிக் கொடுக்கவில்லை.

அந்த சமயத்தில் தாய் கிராமமான கட்ராம்பட்டி கிராமத்தின் வடமேற்கு பகுதியில் மரங்கள் அடர்ந்த இடத்தில் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்திருந்த 36 ஜோடிகளுக்கு திருமண வைபம் நடைபெற்றுள்ளது. இதனை பார்த்த ஜமீன்தாரின் வீரர்கள் அந்த இடத்திற்கு சென்று கன்னிப் பெண்ணை குறித்து விசாரித்துள்னர். அங்கிருந்தவர்களும் புதுமணத் தம்பதியரும் தங்களுக்கு ஏதும் தெரியாது என்று கூறி விட்ட நிலையில் ஜமீன்தாரின் வீரர்கள் திரும்பிச் சென்றுள்ளனர். இதனால் மகிழ்ச்சியடைந்த சிலர் கொம்புஊதி ஜமீன்தாரின் படைகள் ஏமாந்து திரும்பிச் சென்று விட்டன என்று ஏளனம் செய்துள்ளனர். இது ஜமீன் வீரர்களுக்கு தெரியவரவே அவர்கள் அனைவரும் கட்ராம்பட்டியில் அன்றையதினம் 36 ஜோடிகளுக்கு திருமணம் செய்த இடத்திற்கு வந்து மணமகன்களை நிறுத்தி வைத்து தஞ்சமடைந்த கன்னிப்பெண் குறித்து கேட்டு மிரட்டியுள்ளனர்.

அப்போது புதுமாப்பிள்ளைகளாக மணக்கோலத்தில் இருந்தவர்கள் கன்னிப்பெண் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது, அப்படி ஏதேனும் தெரிந்தாலும் தாய் கிராமத்தின் நியமப்படி உயிரே போனாலும் எதுவும் கூறமாட்டோம் என்று ஆணித்தரமாக கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஜமீன்தாரின் படைகள் அன்றையதினம் ஆட்சி செய்து வந்து ஆங்கிலேயரின் சிறப்பு உத்தரவை பெற்று 36 புதுமாப்பிள்ளைகளையும் வாளால் வெட்டியும் துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்துள்ளனர். அப்போது மக்கள் வெள்ளமென திரண்டு வந்து ஜமீன்வீரர்களுடன் போராடிய போது அவர்கள் கட்ராம்பட்டி கிராமத்திலிருந்து பின்வாங்கிச் சென்று விட்டனர்.

இந்நிலையில் ஜமீன்வீரர்களால் படுகொலை செய்யப்பட்டு வீரமரணமடைந்த தங்களது கணவர்களது சிதையில் குதித்து 36 புதுமணப் பெண்களும் உடன்கட்டை ஏறி வீரச்சாவு அடைந்துள்ளனர். இதனால் அந்த கன்னிப்பெண் ஜமீன் சேவகத்திற்கு செல்லாமல் கட்ராம்பட்டி கிராம மக்களால் குடும்பத்துடன் காப்பாற்றப்பட்டாள். மொத்தத்தில் தாய் கிராமமான கட்ராம்பட்டி கிராமத்தில் தஞ்சமென வந்த கன்னிப்பெண்ணை காட்டிக் கொடுக்க மறுத்து ஜமீன்தாரின் படைவீரர்களின் தாக்குதலுக்கு இலக்காகி 36 ஜோடிகள் வீரமணடைந்த இடம் தற்போது 72 தாத்தகாரு வீரக்கோவிலாக உள்ளது.

இன்றைக்கும் கட்ராம்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமத்தில் வசித்திடும் அந்த குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் தங்களது வீடுகளில் நடைபெறுகின்ற சுபகாரியங்கள் உள்ளிட்ட அனைத்து காரியங்களையும் 72 தாத்தகாரு வீரக்கோவிலில் வழிபாடு செய்த பின்னரே தொடங்குகின்றனர். கடந்த காலத்தில் திறந்தவெளியாக இருந்த 72 தாத்தகாரு வீரக்கோவிலில் தற்போது பீடம் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. மழை வேண்டி தாத்தகாரு கோவிலில் வழிபாடு நடத்தினாலும், ஆடு, மாடுகளை விற்பதற்கும் பல்லி சகுனம் உத்தரவாக கிடைத்திடும். மேலும் இந்த கோவிலில் செய்யப்படும் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறி ஜெயம் கிடைத்திடும் என்ற நம்பிக்கை மக்களிடையே இன்றும் காணப்படுகிறது. எனினும் 72 தாத்தகாரு வீரக்கோவிலின் வீரவரலாறு இன்றைய இளைய தலைமுறையினருக்கு பெரும்பாலும் தெரியாமலே உள்ளது. 200 ஆண்டுகளுக்கு முன்பு திருமங்கலம் அருகே தாய் கிராமமாக திகழ்ந்த கட்ராம்பட்டியில் தஞ்மடைந்த கன்னிப் பெண்ணை காப்பாற்றுவதற்காக 36 புதுமண ஜோடிகள் தங்களது உயிரை தியாகம் செய்து வீரமரணமடைந்த 72 தாத்தகாரு வீரக்கோவிலின் மெய்சிலிர்க்க வைக்கும் வரலாறு தமிழர்களின் வீரத்தையும் விவேகத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

Seema Raja - Movie Review | Sivakarthikeyan | Samantha | keerthy suresh

Seema Raja | Public Review Opinion | சீமராஜா திரைப்படம் ரசிகர்கள் கருத்து

Kozhukattai Recipe in Tamil | Modak Kolukattai Recipe in Tamil | Pooranam Recipe | Sweet Kolukattai

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து