முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேரையூர் தாலுகாவில் சிறுவர்களை சீரழித்துவரும் சிகரெட் மிட்டாய்கள்: தடைசெய்திட பொதுமக்கள் கோரிக்கை:

திங்கட்கிழமை, 7 மே 2018      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- பேரையூர் தாலுகாவின் பல்வேறு கிராமங்களில் உள்ள பெட்டிக்கடைகளில் நிஜமான சிகரெட்டை போன்று காட்சியளிக்கும் சிகரெட் மிட்டாய்கள் சிறுவர்களை சீரழித்து வருவதாக வெளியான தகவல்களால் அவற்றை உடனடியாக தடைசெய்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிகரெட் பிடிப்பதால் ஏற்படும் தீமைகளை பொதுமக்களுக்கு விளக்கிடும் வகையில் மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கை களுக்கு தற்போது பலன் கிடைத்து வருகிறது.இந்நிலையில் இளைய சமுதாயத்தின் அஸ்திவாரத்தையே ஆட்டம் காண வைத்திடும் வகையில் சிறுவர்களுக்கு சிகரெட் பிடித்திடும் பழக்கத்தை உருவாக்கக்கூடிய அதிபயங்கர ஆபத்து தற்போது மிட்டாய் வடிவில் கடைகளுக்கு வந்துள்ளது.குறிப்பாக மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் உள்ள பெரும்பாலான கிராமத்திலிருக்கும் பெட்டிக் கடைகளில் நிஜமான சிகரெட்டை போன்று தோற்றம் கொண்ட சிகரெட் மிட்டாய்கள் தான் சிறுவர்களின் இன்றைய விருப்பமிகு மிட்டாயாக திகழ்கிறது.ஒரு ரூபாய்க்கு விற்கப்படும் இந்த மிட்டாய்களை வாங்கிடும் சிறுவர்கள் அவற்றை நிஜசிகரெட்டை போல் வாயில் வைத்துக் கொண்டு திரைப்பட நடிகர்கள் ஸ்டைலில் இங்குமங்கும் உலா வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.அதே போன்று பள்ளி செல்லும் சமயத்திலும் இந்த சிகரெட் மிட்டாயை சிறுவர்கள் தங்களது பெற்றோரிடம் அடம் பிடித்து வாங்கிச் செல்கின்றனர்.
நிஜ சிகரெட் பிடிப்பது போன்று தங்களது குழந்தைகள் வாயில் சிகரெட் மிட்டாய்களை வைத்திருப்பது பெற்றோர்களை பெரிதும் கவலையடைய வைத்துள்ளது.சிகரெட் பிடிக்கக்கூடாது என ஒழுக்கத்தை கற்றுத் தந்திடும் சமயத்தில் பெட்டிக் கடைகளில் விற்பனை செய்யப்படும் இந்த மிட்டாய் சிகரெட்கள் சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் மனதில் நிஜ சிகரெட் பிடிக்கும் ஆசையை விஷவிதையாக தூவிவருகிறது.எனவே பேரையூர் தாலுகாவின் பெட்டிக்கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் சிகரெட் மிட்டாய்களை உடனடியாக தடைசெய்து சிறுவர்கள் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாத்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து