ஐ.பி.எல். 41-வது லீக் போட்டியில் மும்பை அணி மீண்டும் வெற்றி: 4-வது இடத்துக்கு முன்னேற்றம்

வியாழக்கிழமை, 10 மே 2018      விளையாட்டு
mumbai team win 2018 5 10

கொல்கத்தா : கொல்கத்தாவுக்கு எதிராக நடந்த போட்டியில் இஷான் கிஷானின் விளாசலால் மும்பை இண்டியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்திற்கு முன்னேறி மற்ற அணிகளுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது மும்பை.

41வது லீக்...

ஐ.பி.எல். தொடரில் நடந்த 41வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பை இண்டியன்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் பீல்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சூர்யாகுமார் யாதவும் லெவிஸூம் களமிறங்கினர். பியூஸ் சாவ்லா பந்துவீச்சில், லெவிஸ் 18 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து கேப்டன் ரோகித் சர்மா வந்தார். இவரும் யாதவும் அடித்து ஆடினர். யாதவ், 32 பந்தில் 36 ரன்கள் எடுத்திருந்தபோது சாவ்லா பந்தில் ரிங்கு சிங்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த விக்கெட் கீப்பர் இஷான் கிஷான் அதிரடி காட்டினார். அவரது பேட்டிங்கில் அனல் பறந்தது.


கிஷான் அதிரடி

சாவ்லா பந்தில் தொடர்ந்து மூன்று பவுண்டரிகளை விளாசிய கிஷான், குல்தீப் யாதவின் ஓவரில் தொடர்ச்சியாக 4 சிக்சர் தூக்கி மிரட்டினார். பின்னர், 21 பந்துகளில் 6 சிக்சர் 5 பவுணட்ரியுடன் 62 ரன்கள் குவித்த அவர், நரேன் சுழலில் உத்தப்பாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். கேப்டன் ரோகித் சர்மாவும் 36 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆக, அடுத்த வந்த ஹர்திக் பாண்டியா 13 பந்துகளில் 19 ரன்களும் பென் கட்டிங் 9 பந்துகளில் 24 ரன்களில் எடுத்தனர். இதையடுத்து அந்த அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் குவித்தது. குணால் பாண்ட்யா 8 ரன்களுடன் டுமினி ரன் ஏதுமின்றியும் களத்தில் இருந்தனர். கொல்கத்தா தரப்பில் பியுஷ் சாவ்லா, 4 ஒவர்களில் 48 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட் எடுத்தார்.

ஆரம்பமே அதிர்ச்சி

பின்னர் கடின இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி. முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே நரேன், மேக்லனகன் பந்துவீச்சில் குணால் பாண்ட்யாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் 4 ரன்கள் எடுத்திருந்தார். இன்னொரு தொடக்க ஆட்டக்காரரான கிறிஸ் லின், அதிரடியாக ஆடத் தொடங்கும்போது ரன் அவுட் ஆனார். அவர் 15 பந்தில் 21 ரன் எடுத்தார். ராபின் உத்தப்பா 14 ரன்களிலும் நிதிஷ் ராணா 21 ரன்களிலும் அவுட் ஆயினர். அடுத்த வந்தவர்களில் யாரும் நிலைத்து நிற்கவில்லை. ஆண்ட்ரூ ரஸல் 2, கேப்டன் தினேஷ் கார்த்திக் 5, ரிங்கு சிங் 5 ரன்கள் என நடையை கட்ட, அடுத்து வந்தவர்களும் அவர்களை பின்பற்றியதால் அந்த அணி 18.1 ஓவர்களில் 108 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 102 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.

ஆட்ட நாயகன் விருது

மும்பை தரப்பில் குணால் பாண்ட்யா, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். மெக்லனகன், பும்ரா, மார்கண்டே, பென் கட்டிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இந்த தொடரில் கொல்கத்தா அணியை இரண்டாவது முறையாக வென்றிருக்கிறது மும்பை அணி. ஆட்ட நாயகன் விருது, அதிரடியாக 21 பந்துகளில் 62 ரன்கள் விளாசிய இஷான் கிஷானுக்கு வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளது மும்பை இண்டியன்ஸ் அணி, கொல்கத்தா, 11 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, 6 தோல்விகளுடன் அடுத்த இடத்துக்கு இறங்கியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து