முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணு ஆயுதத்தைத் துறந்தால் பொருளாதார உதவி: வட கொரியாவிடம் அமெரிக்கா உறுதி

ஞாயிற்றுக்கிழமை, 13 மே 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: வட கொரியா அணு ஆயுதங்களை முழுமையாகக் கைவிட்டால், அந்த நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு உதவுவதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது.

இதுகுறித்து, வட கொரியாவில் அந்த நாட்டு அதிபர் கிம் ஜோங்கை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி திரும்பிய அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பியோ, வாஷிங்டனில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
வட கொரியாவில் அதிபர் கிம் ஜோங்குடனான பேச்சுவார்த்தை சிறப்பானதாக அமைந்திருந்தது.
அவருக்கும், அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும் இடையே வரும் ஜூன் மாதம் 12-ஆம் தேதி நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக்குவதற்கான வாய்ப்புகளைக் குறித்து நாங்கள் விரிவாக ஆலோசித்தோம்.
கொரிய தீபகற்பத்திலிருந்து அணு ஆயுதங்களை அறவே நீக்குவதை அவர் உறுதிப்படுத்தினால், அதற்குப் பதிலாக பொருளாதாரத் தடைகளை நீக்கி வட கொரியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்த உறுதிமொழியை அமெரிக்கா அளிக்கும் என்று கிம்மிடம் தெரிவித்தேன் என்றார்.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது, அதிபர் கிம் ஜோங்-உன் மற்றும் மைக்கேல் பாம்பியோ இடையிலான சந்திப்பில் பங்கேற்ற தென் கொரிய வெளியுறவுத் துறை அமைச்சர் கங் க்யுங்-வாவும் உடனிருந்தார்.
கடந்த ஆண்டின் இறுதிவரை சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ஏவுகணைச் சோதனைகளையும், அணு குண்டு சோதனைகளையும் தொடர்ந்து வடகொரியா நடத்தி வந்தது.

இதற்குப் பதிலடியாக, ஐ.நா. அமைப்பும், அமெரிக்காவும், வட கொரியா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தன. இதனால், வட கொரியாவுக்கும், அமெரிக்க-தென் கொரிய நாடுகளுக்கும் இடையே கடும் பதற்றம் நிலவி வந்தது.

இந்தச் சூழலில், தென் கொரியாவில் மார்ச் மாதம் நடைபெற்ற ஒலிம்பிக் துவக்க விழாவுக்கு தனது தங்கை கிம் யோ-ஜோங்கை வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் அனுப்பி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து இரு கொரிய நாடுகளுக்கும் இடையே பதற்றம் தணிந்து இணக்கமான சூழல் ஏற்பட்ட நிலையில், கிம் ஜோங்-உன், தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் ஆகியோரிடையிலான வரலாற்றுச் சிறப்பு மிக்கச் சந்திப்பு கடந்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற்றது. அந்தச் சந்திப்பில், கொரிய தீபகற்பத்தில் நிரந்தர அமைதியை நிலவச் செய்வதற்கு இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

இதன் தொடர்ச்சியாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் வட கொரிய அதிபர் கிம் ஜோங்கின் சந்திப்பு சிங்கப்பூரில் ஜூன் 12-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து