முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.எஸ். அமைப்பின் வீழ்ச்சிக்குப் பின் முதல் முறையாக ஈராக்கில் தேர்தல் முடிவுகள் விரைவில் வெளியாகும்

ஞாயிற்றுக்கிழமை, 13 மே 2018      உலகம்
Image Unavailable

பாக்தாத்: ஈராக்கில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்ட பிறகு அந்த நாட்டின் நாடாளுமன்றத்துக்கு முதல் முறையாக தேர்தல் நடைபெற்றது.  இந்த தேர்தல் முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

அண்மைக் காலமாக பயங்கரவாதத் தாக்குதல்களின் எண்ணிக்கையும், தீவிரமும் வெகுவாகக் குறைந்துள்ள நிலையிலும், ஐ.எஸ். உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் இந்தத் தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், வன்முறைச் சம்பவங்களைத் தவிர்ப்பதற்காக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்தத் தேர்தலுக்காக, சுமார் 9 லட்சம் போலீஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போதைய அதிபர் ஹைதர் அல்அபாதி, மீண்டும் ஒருமுறை இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறார். தனது ஆட்சியின் கீழ் ஐ.எஸ். பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டதை சாதனையாகக் கூறி அவர் மக்களிடையே ஆதரவைத் தேடி வருகிறார்.

எனினும், அவர் சார்ந்த ஷியா பிரிவிலேயே அவருக்கு ஏராளமான போட்டி வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளதால் அவரது ஆதரவு வாக்குகள் பிரியக்கூடும் என்று கூறப்படுகிறது.

அவருக்கு முந்தைய அதிபர் நூரி அல்மாலிக்கியும் இந்தத் தேர்தலில் போட்டியிட்டாலும், அவரது ஆட்சிக் காலத்தில் ஈராக்கின் கணிசமான பகுதிகளை ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இழந்த காரணத்தால், அவருக்கு போதிய ஆதரவு இருக்காது என்று கருதப்படுகிறது.

329 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்துக்காக சுமார் 7,000 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், இந்தத் தேர்தலில் யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைப்பது கடினம் என்று கூறப்படுகிறது. விரைவில் தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து