முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஜினி, கமலை மக்கள் ஏற்க மாட்டார்கள் துணை சபாநாயகர் தம்பிதுரை பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 13 மே 2018      தமிழகம்
Image Unavailable

கரூர்: ரஜினி, கமலை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று மக்களவைத் துணைத் தலைவர் மு. தம்பிதுரை தெரிவித்தார்.

கரூர் நகராட்சிக்கு உள்பட்ட 46-வது வார்டில்  நடைபெற்ற பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் மேலும் கூறியதாவது:
ஜெயலலிதாவை பொறுத்தவரை மத்தியில் உள்ள ஆட்சியை, கட்சியை என்றும் நம்பவில்லை. நாங்கள் நம்பிக் கொண்டிருப்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத்தான்.. ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போது எடுத்த முயற்சியால் காவிரி பிரச்சினை விரைவில் தீரும். இதற்கான முழுப் பெருமை ஜெயலலிதாவையும், அதிமுகவையும் சேரும்.

இப்போது சிலர் தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டதாகக் கூறுகிறார்கள். வெற்றிடம் என்பது கிடையாது. அரசியலில் தலைவர்கள் மறைவுக்குப் பிறகு அந்தக் கட்சியானது ஆட்சி நடத்திக் கொண்டுதான் இருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை காமராஜர் ஆட்சிக்கு பிறகு தொடர்ந்து திராவிடக் கட்சிகள் தான் ஆளுகின்றன.

எந்த ஓர் இயக்கத்திற்கும் அஸ்திவாரம், அடிப்படை வேண்டும். தந்தை பெரியார் உருவாக்கிய சமூக நீதியே திராவிட இயக்கத்துக்கு அடித்தளமாக அமைக்கப்பட்டது. அதைத்தான் அண்ணாவும் பின்பற்றினார்.

எம்ஜிஆர், கருணாநிதி ஆகியோர் தந்தை பெரியார், அண்ணா வழியில் வந்து அரசியல் நடத்திக் காட்டினர்.  ஜனநாயகத்தில் ரஜினி, கமல் என யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். அதற்கு நாங்கள் தடையாக இல்லை. ஆனால் அடிப்படைக் கொள்கை இருக்க வேண்டும். ரஜினியும், கமலும் என்ன செய்தார்கள், எந்தப் பாசறையில் இருந்து வந்திருக்கிறார்கள். திடீரென்று வந்துவிட்டு நாங்கள், அதை செய்வோம், இதைச் செய்வோம் என்றால் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

யாரும் அரசியலுக்கு வர உரிமையுண்டு, மக்களுக்கு பணியாற்றுவதை வரவேற்கிறோம். ஆனால் மக்கள் யாருக்கு தலைமையைத் தர போகிறார்கள் என்பதைத்தான் பார்க்க வேண்டும்.

புதிய பென்ஷன் திட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம். அதற்கு ஆதரவு கொடுக்கவில்லை. ஆனால் திட்டம் வந்து விட்டது என்றால் அரசு செயல்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது. வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அதற்கு எதிராகக் குரல் கொடுப்போம் என்றார்.  பேட்டியின்போது போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உடனிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து