கொல்கத்தா அணியிடம் 31 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி தோல்வி

ஞாயிற்றுக்கிழமை, 13 மே 2018      விளையாட்டு
sunil 2018 05 13

இந்தூர்: கொல்கத்தா அணியிடம் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது பஞ்சாப் அணி கொல்கத்தா நைட்ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் 44வது ஆட்டம் இந்தூரில் நடைபெற்றது.

பஞ்சாப் அணி முன்னதாக டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து கொல்கத்தா அணி சார்பில் கிறிஸ் லீன், சுனில் நரைன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 27 ரன்களுடன் லீனும், 24 ரன்களுடன் உத்தப்பாவும், 31 ரன்களுடன் ரஸ்ஸலும், ஆண்ட்ரு டை பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.

4 சிக்ஸர், 9 பவுண்டரியுடன் 36 பந்துகளில் 75 ரன்களை எடுத்த நரைன், டை பந்துவீச்சில் வீழ்ந்தார். தினேஷ் கார்த்திக் 50, நிதிஷ் ராணா 11 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஷுப்மன் கில் 16, ஜாவன் சியர்லஸ் 6 ஆகியோர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.


20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்புக்கு 245 ரன்களை எடுத்திருந்தது. பஞ்சாப் தரப்பில் ஆண்ட்ரு டை அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளையும், மொகித் சர்மா, அக்ஸர் பட்டேல் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது.

கே.எல். ராகுல், கிறிஸ் கெயில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 21 ரன்கள் எடுத்த நிலையில் கெயிலும், ரன்கள் ஏதுமின்றி மயங்க் அகர்வாலும், 3 ரன்கள் எடுத்த கருண் நாயர் ஆகியோர் அடுத்தடுத்து ரஸ்ஸல் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினர். 29 பந்துகளில் 66 ரன்களை எடுத்த ராகுல், நரைன் பந்தில் போல்டானார்.

அக்ஸர் பட்டேல் 19, ஆரோன் பின்ச் 34, ஆண்ட்ரு டை 14 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
45 ரன்களை குவித்த கேப்டன் அஸ்வின் போல்டானார். 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு பஞ்சாப் அணி 214 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. கொல்கத்தா தரப்பில் ரஸ்ஸல் அபாரமாக பந்து வீசி 3 விக்கெட்டையும், பிரசித் 2 விக்கெட்டையும், யாதவ், நரைன், சீயர்லஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தனர்.

ஐபிஎல் இல் 4வது அதிகபட்ச ஸ்கோர் 245
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி எடுத்த 245/6 ஐபிஎல் வரலாற்றில் 4வது அதிகபட்ச ஸ்கோராகும். 2013 இல் 263/5, 2016-இல் 248/3 என பெங்களூரு அணியும், 2010-இல் 246/5 என சென்னை அணியும் முந்தைய ஆண்டுகளில் எடுத்த ரன்களே அதிகபட்ச ஸ்கோராகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து