முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழனி கோவில் ஐம்பொன் சிலை மோசடியில் முன்னாள் உதவி ஆணையர் உட்பட 2 பேர் கைது

திங்கட்கிழமை, 14 மே 2018      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், - பழனி கோவில் ஐம்பொன் சிலை செய்ததில் ஏற்பட்ட மோசடி தொடர்பாக கோவில் முன்னாள் உதவி ஆணையர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனியில்  உள்ள மூலவர் சிலை நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது. போகரால் உருவாக்கப்பட்ட இந்த சிலை 3000 ஆண்டுகள் பழமையானது. தொடர்ந்து அபிஷேகம் நடத்தப்பட்டதால் இந்த சிலை சேதம் அடைந்ததாகக் கூறி கடந்த 2003ம் ஆண்டு புதிய சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி 200 கிலோ எடையில் புதிய சிலை அமைக்கப்பட்டது. ஐம்பொன்னால் அமைக்கப்பட்ட இந்த சிலைக்காக திருத்தணி முருகன் கோவிலில் இருந்து 100 கிலோ தங்கம் வாங்கப்பட்டது. பின்னர் 2004ம் ஆண்டு இந்த சிலை மூலவர் சன்னிதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஒரே சந்நிதியில் 2 சிலைகள் வைக்கப்பட்டதால் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சி நிலவியது. மேலும் சிலை அமைக்கப்பட்ட சில மாதங்களிலேயே அது பொலிவிழந்தது. இதனால் சிலை அமைத்ததில் ஏதேனும் குறைபாடு நடந்திருக்கலாம் என்று புகார் எழவே புதிய ஐம்பொன் சிலை கோவிலில் உள்ள லாக்கரில் வைக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் கோவில்களில் உள்ள சிலைகளை ஆய்வு செய்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு பிரிவினர் பழனியில் புதிதாக அமைக்கப்பட்ட ஐம்பொன் சிலையையும் ஆய்வுக்கு உட்படுத்தினர். ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் நடத்திய இந்த ஆய்வில் ஐம்பொன் சிலை அமைத்ததில் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்படவே ஸ்தபதி முத்தையா, 2004ம் ஆண்டு கோவில் இணை ஆணையராக இருந்த கே.கே.ராஜா ஆகியோரைக் கைதுசெய்தனர். இதனிடையே இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. ஞிதிமன்ற உத்தரவுப்படி மீண்டும் இவ்வழக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து ஐ.ஜி.பொன்மாணிக்கவேல், டி.எஸ்.பி. கருணாகரன் ஆகியோர் மீண்டும் தங்கள் கிடுக்கிப்பிடி விசாரணையை தொடங்கினர். 2004ம் ஆண்டு கோவில் தலைமை குருக்களாக இருந்தவர்கள் மற்றும் அப்போது பணியில் இருந்த முக்கிய அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. 2 நாட்கள் இரவு பகலாக இந்த சோதனை நடத்தப்பட்டதில் மேலும் சிலை அமைப்பில் உடந்தையாக இருந்தது தெரியவந்தது.
சென்னை ஐ.ஐ.டி. உலோகவியல் துறை அதிகாரி முருகையன் புதிய ஐம்பொன் சிலையை சோதனையிட்டதில் அதில் சேர்க்கப்பட்ட தங்கத்தின் அளவு குறைவாக இருந்தது உறுதி செய்யப்பட்டது. பின்னர் 2004ம் ஆண்டு பழனி கோவில் உதவி ஆணையராக இருந்த ஆயக்குடியைச் சேர்ந்த புகழேந்தி, நகை மதிப்பீட்டாளர் தேவேந்திரன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. புகழேந்தி திருத்தணி முருகன் கோவிலில் இணை ஆணையராக பணிபுரிந்து ஓய்வு பெற்றார். தேவேந்திரன் பணி ஓய்வு பெற்று சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வருகிறார். இருவரையும் விசாரணைக்காக பழனி வரவழைத்து கிடுக்கிப்பிடி கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது சிலை மோசடி குறித்து அவர்களுக்கு தொடர்பு இருந்தது தெரியவரவே அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து