முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஞ்சாப்பை வீழ்த்தியதற்கு டாஸ் முக்கிய பங்கு - பெங்களூர் கேப்டன் கோலி கருத்து

செவ்வாய்க்கிழமை, 15 மே 2018      விளையாட்டு
Image Unavailable

இந்தூர் : பஞ்சாப்பை வீழ்த்தியதற்கு டாஸ் முக்கிய பங்கு வகித்ததாக பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார்.

பெங்களூர் வெற்றி

ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப் அணியை மீண்டும் வீழ்த்தி பெங்களூர் அணி 5-வது வெற்றியை பெற்றது. இந்தூரில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 15.1 ஓவரில் 88 ரன்னில் சுருண்டது. ஆரோன் பிஞ்ச் அதிகபட்சமாக 23 பந்தில் 26 ரன் (1 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார்.
உமேஷ்யாதவ் 3 விக்கெட்டும், முகமது சிராஜ், யசுவேந்திர சாஹல், கிராண்ட் ஹோம், மொய்ன் அலி தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார். பின்னர் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணி 8.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 92 ரன் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் விராட்கோலி 28 பந்தில் 48 ரன்னும் (6 பவுண்டரி, 2 சிக்சர்), பார்த்தீவ் பட்டேல் 22 பந்தில் 40 ரன்னும் (7 பவுண்டரி) எடுத்தனர்.

5-வது வெற்றி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பெற்ற 5-வது வெற்றியாகும். இதன்மூலம் அந்த அணி ‘பிளேஆப்’ வாய்ப்பில் நீடிக்கிறது. ஏற்கனவே பஞ்சாப்பை சொந்த மண்ணில் வீழ்த்தி இருந்தது. தற்போது அந்த அணியை மீண்டும் தோற்கடித்தது உள்ளது. இந்த வெற்றி குறித்து பெங்களூர் அணி கேப்டன் விராட்கோலி கூறியதாவது:-

2 ஆட்டங்களில்...

கடந்த ஒரு வாரமாக பைத்தியம் பிடித்தது போல் இருந்தது. ஒரு கட்டத்தில் ‘பிளேஆப்’ சுற்றில் இருந்து வெளியேறிவிட்டோம் என்றே நினைத்தேன். ஆனால் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிகள் பெற்றது நம்பிக்கை அளித்தது. அடுத்து நடைபெறும் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றால் ‘பிளேஆப்’ சுற்றுக்கு செல்ல முடியும். ரன் ரேட்டும் நன்றாக இருக்கிறது.

நடக்கவில்லை...

இந்த ஆட்டத்தில் எங்கள் அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். எதிர்மறை வி‌ஷயங்கள் எதுவும் நடக்கவில்லை. பவுலர்கள் நன்றாக வீசினார்கள். உமேஷ்யாதவ் ஒரே ஓவரில் 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். பிறகு தொடர்ந்து விக்கெட்டுகள் சரிந்தன. வெற்றிக்கு ‘டாஸ்’ முக்கிய பங்கு வகித்தது. இவ்வாறு அவர் கூறினார்.

ஏமாற்றம் அளிக்கிறது...

பஞ்சாப் அணி 6-வது தோல்வியை தழுவியது. தொடர்ச்சியாக 3-வது ஆட்டத்தில் தோற்றது. இந்த தோல்வியால் பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் மிகுந்த ஏமாற்றம் அடைந்து உள்ளார். தோல்வி குறித்து அவர் கூறியதாவது:-

இந்த தோல்வி ஏமாற்றம் அளிக்கிறது. நாங்கள் சரியாக ஆடவில்லை. எங்கள் பேட்ஸ்மேன்கள் தடுமாறிவிட்டார்கள். எப்படி இருந்தாலும் இந்த தோல்வியில் இருந்து அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டும். இதுவரை ஆடிய போட்டிகளில் 20 ஓவர்களில் மூன்று அல்லது நான்கு விக்கெட்டுகளை தான் இழந்து இருக்கிறோம். இந்த ஆட்டத்தில் 15 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து விட்டோம். நாங்கள் மோசமாக தோற்கடிக்கப்பட்டு இருக்கிறோம். எங்கள் ரன் ரேட்டும் கணிசமாக குறைந்துவிட்டது. அடுத்த 2 போட்டிகளில் வெல்ல வேண்டும். எங்களிடம் அபாரமான பந்து வீச்சாளர்கள் உள்ளனர். ஆனால் வெளிநாட்டு பேட்ஸ்மேன்கள் இதுவரை சிறப்பான இன்னிங்சை கொடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து