முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழனி கோவில் சிலை மோசடியில் சிக்கிய முன்னாள் உயர் அதிகாரி

புதன்கிழமை, 16 மே 2018      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், - பழனி கோவில் ஐம்பொன் சிலை மோசடியில் முன்னாள் உயர் அதிகாரி சம்பந்தப்பட்டிருப்பது தெரியவரவே அவரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் உள்ள நவபாஷாணத்தால் ஆன மூலவர் சிலை சேதமடைந்ததாகக் கூறி புதிய ஐம்பொன் சிலை முடிவு செய்யப்பட்டது. இதற்காக 200 கிலோ எடையில் கடந்த 2004ம் ஆண்டு ஐம்பொன் சிலை அமைக்கப்பட்டது. இந்த சிலை அமைத்ததில் போதிய தங்கம் சேர்க்கப்பட வில்லை என்றும், முறைகேடு நடந்தது என்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் கண்டறிந்தனர். இதனையடுத்து நடத்திய விசாரணையில் ஸ்தபதி முத்தையா, முன்னாள் இணை ஆணையர் கே.கே.ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து சென்னை ஐ.ஐ.டி. குழுவினர் பழனி கோவிலில் உள்ள ஐம்பொன் சிலை உட்பட பழனி மலைக்கோவில், பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்த பல்வேறு மூலவர், உற்சவர் சிலைகளை சோதனை நடத்தினர். மேலும் சிலை அமைக்கப்பட்ட போது பணியில் இருந்த பல்வேறு அதிகாரிகள், அர்ச்சகர்கள், பணியாளர்கள் ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. அதில் கிடைத்த தகவலின் பேரில் முன்னாள் உதவி ஆணையர் புகழேந்தி, நகை மதிப்பீட்டாளர் தேவேந்திரன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 5 நாட்களாக பழனியில் முகாமிட்டுள்ள சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் பல்வேறு முன்னாள் கோரில் பணியாளர்களின் வீடுகளுக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் சிலரை தங்களது இருப்பிடத்திற்கே வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் சுமார் 20 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்ட ஆவணங்களையும் ஆய்வு செய்தனர். இதில் மூலவர் சன்னிதியில் வைக்கப்பட்ட புதிய ஐம்பொன் சிலை அமைப்பின் போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக இருந்த தனபால் என்பவர் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அவரது கீழ் தான் இணை ஆணையர், உதவி ஆணையர், மேலாளர், நகை மதிப்பீட்டாளர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் பணிபுரிந்துள்ளனர். எனவே சிலை மோசடியில் அவருக்கும் தொடர்பு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தனபால் தற்போது பட்டுக்கோட்டை அருகே வசித்து வருகிறார். அவரிடம் விசாரணை நடத்த சென்ற போது அங்கிருந்து தலைமறைவாகி விட்டார். இதனால் எங்களது சந்தேகம் மேலும் வலுத்துள்ளது. அவரை விரைவில் பிடித்து அடுத்தகட்ட விசாரணையை தொடங்கவுள்ளோம். இதுதவிர மேலும் சிலர் மீதும் சந்தேகம் அடைந்துள்ளோம். இதனால் இவ்வழக்கில் அடுத்தடுத்து மேலும் சிலர் கைதாக வாய்ப்புள்ளது என்று தெரிவித்தனர். இதனால் பழனி கோவில் சிலை மோசடி வழக்கு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து