முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிபா வைரஸ் காய்ச்சல் அச்சம்! திருமங்கலம் பகுதியில் பழங்கள் விற்பனை சரிவு

திங்கட்கிழமை, 21 மே 2018      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.-கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் வெகுவாக பரவி வரும் நிலையில் அந்த காய்ச்சல் பயத்தினால் திருமங்கலம், டி.கல்லுப்பட்டி மற்றும் பேரையூர் பகுதிகளில் பழங்களின் விற்பனை வெகுவாக சரிந்துள்ளது.
கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் 15- க்கும் மேற்பட்டோர் இறந்திருப்பதாகவும் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வெளவால்கள் மூலம் இந்த நிபா வைரஸ் காய்ச்சல் பரவி  வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் மலைப் பகுதியில் உள்ள தோட்டங்களுக்கு ஆயிரக்கணக்கில் வரும் வெளவால்கள் பழங்களை வேட்டையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளன. இதே போன்று திருமங்கலம் அருகேயுள்ள நாகமலை கணவாய் பகுதியில் உள்ள வவ்வா பொடவு, திருமங்கலம் மதுரை சாலையிலுள்ள தனியார் நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான ராட்சத வெளவால்கள் தங்கியுள்ளன. இரவு நேரங்களில் மட்டுமே பறந்திடும் இந்த வெளவால்கள் திருமங்கலம் பகுதியிலுள்ள பழத்தோட்டங்கள் மற்றும் கொடைகானல், மூணாறு,குமுளி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள எஸ்டேட்டுகளில் விளைந்திடும் பழங்களை உண்பதை வழக்கமாக கொண்டுள்ளன.
நிபா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் இது குறித்த அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது. இதனால் திருமங்கலம் டி.கல்லுப்பட்டி பேரையூர் ஆகிய பகுதிகளில் பழங்களின் விற்பனை வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக கேரள மாநிலத்து மலைப்பழங்களான வாழை, திராட்சை, சப்போட்டா, கொய்யா போன்றவற்றின் மூலமாக நிபா வைரஸ் பரவிடும் என்று பரவிய தகவல்களால் பொதுமக்கள் பழங்களை வாங்கிச் செல்ல அச்சப்படுகின்றனர். திருமங்கலம் பகுதியிலும் வெளவால்கள் அதிகளவு காணப்படுவதால் பழங்களை வெளவால் கடித்திருக்கும் என்ற அச்சத்தாலும் பழங்களின் விற்பனை பெருமளவு சரிந்துள்ளதால் பழக்கடைக்காரர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து