முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக மாநில முதல்வராக குமாரசாமி இன்று பதவியேற்பு 20 எல்.இ.டி. டி.வி.க்களில் நேரலை

செவ்வாய்க்கிழமை, 22 மே 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூர்: கர்நாடக முதல்வராக இன்று குமாரசாமி பதவியேற்கவுள்ளார். இந்த விழாவில் 10 கட்சிகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விழாவில் 2 லட்சம் தொண்டர்களை திரட்ட ஏற்பாடு நடந்து வருகிறது.

கர்நாடகத்தில் முதல்வராக குமாரசாமி இன்று பதவியேற்கிறார். இதைத் தொடர்ந்து நாளை வியாழக்கிழமை அன்று அவர் பெரும்பான்மையை நிரூபிக்கிறார். பெங்களூர் கண்டிரவா மைதானத்தில் நடைபெறும் இந்த விழாவுக்கு ஏராளமான அரசியல் தலைவர்களை குமாரசாமி அழைத்துள்ளார். சுமார் 2 லட்சம் பேர் வரை இந்த விழாவில் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து தேவகவுடா கூறுகையில், காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ளவர்கள், வைக்காதவர்கள் என அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் அழைத்துள்ளோம். இந்த மேடை பா.ஜ.க.வுக்கு எதிராக மதசார்பற்ற , ஜனநாயக சக்திகள் ஒன்று திரள முதல் நடவடிக்கையாக இருக்கும் என்றார்.

பங்கேற்கும் தலைவர்கள்
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக்  அப்துல்லா, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்,  அசாம் முன்னாள் முதல்வர் பிரபுல்லா குமார் மகந்தா, மார்க்சிஸ்ட் கட்சி தலைவர் சீதாராம் எச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டி. ராஜா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

காலணி அணியாமல்...
இவர்கள் தவிர சோனியா மற்றும் ராகுல் ஆகியோரும் இந்த விழாவில் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. 20 எல்.இ.டி. டி.வி.க்கள் மூலம் இந்த பதவியேற்பு நிகழ்ச்சி நேரலை செய்யப்படுகிறது. 30 ஆயிரம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. பதவியேற்பு விழாவில் ஜோதிடர் கூறிய யோசனைப்படி குமாரசாமி காலணி அணியாமல் பதவியேற்கவிருக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இன்று முதல்வராக பதவியேற்கும் குமாரசாமி, தனது தொண்டர்களுக்கு வாட்ஸ்அப்பில் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் கட்அவுட், பேனர் போன்றவைகளை வைக்க வேண்டாம். பட்டாசுகள் வெடிக்க வேண்டாம். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காங்கிரசுக்கு சபாநாயகர் பதவி
தனது அமைச்சரவையில் காங்கிரசை சேர்ந்த கிட்டத்தட்ட 20 பேருக்கு குமாரசாமி அமைச்சர் பதவிகளை வழங்குவார் என தெரியவந்துள்ளது. மேலும் காங்கிரசுக்கு இரண்டு துணை முதல்வர் பதவி மற்றும் சபாநாயகர் பதவியையும் விட்டுத்தர குமாரசாமி முடிவு செய்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பதவியேற்பு விழா இன்று மாலையில் கோலாகலமாக பெங்களூரில் நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து