முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

செவ்வாய்க்கிழமை, 22 மே 2018      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், - பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனியில் நடைபெறும் திருவிழாக்களில் வைகாசி விசாகமும் ஒன்றாகும். இத்திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று(22ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது. பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் கடக லக்கினத்தில் கொடியேற்றப்பட்டது. வேல், மயில், சேவல் பொறித்த மஞ்சள் நிறக்கொடிக்கு சிறப்பு ஞீஜைகள் செய்யப்பட்டு மேளதாளங்கள் முழங்க கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்தது. கோவில் மண்டபத்தில் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. கோவில் கொடிமரத்தில் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்ட போது ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து உச்சிகால ஞீஜையில் மலைக்கோவிலில் மூலவர், உற்சவர், வள்ளி,தெய்வானை, துவார பாலகர்கள், சுவாமியின் வாகனங்களுக்கு காப்பு கட்டப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வரும் 27ம் தேதி நடக்கிறது. அன்று இரவு 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சாமிக்கு தனுர் லக்கினத்தில் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.  மேலும் மறுநாள் 28ம் தேதி வைகாசி விசாக தேரோட்டம் நடைபெறும். அன்று காலை தோளுக்கிணியாள் வாகனத்தில் முத்துக்குமாரசாமி, வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி காலை 9 மணிக்கு மேல் 10மணிக்குள் திருத்தேரேற்றமும், மாலை 4.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
திருவிழாவையொட்டி 10 நாட்களும் பெரியநாயகி அம்மன் கோவிலில் தினசரி மாலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை மங்கள இசை, பக்தி சொற்பொழிவு,  இன்னிசை, கலை நிகழ்ச்சிகள், பரதநாட்டியம், வீணை கச்சேரி ஆகியவை நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து