முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனைத்து விவகாரங்களின் பின்னணியிலும் ஆர்.எஸ்.எஸ் இருப்பதாக ராகுல் கருதினால் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது: அமித்ஷா

புதன்கிழமை, 23 மே 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : அனைத்து விவகாரங்களின் பின்னணியிலும் ஆர்.எஸ்.எஸ். இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருதினால் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று பா.ஜ.க தேசியத் தலைவர் அமித்ஷா தெரிவித்தார்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தேர்வு செய்யும் நபர்களை ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளாக்க பிரதமர் நரேந்திர மோடி முயற்சித்து வருவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ள நிலையில், அமித் ஷா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

ஐ.ஏ.எஸ் பயிற்சி தேர்வுகள் வழக்கம்போல் நடைபெறும். யார் தேர்ச்சி பெற வேண்டும் என்று எப்படி தீர்மானிக்க முடியும்? பயிற்சியில் அவர்கள் எப்படி செயல்படுகிறார்களோ அதற்கு ஏற்றாற்போல் தேர்ச்சி பெறுவார்கள்.இதில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு எங்கிருந்து வந்தது என்பது புரியவில்லை. அனைத்து விவகாரங்களின் பின்னணியிலும் ஆர்.எஸ்.எஸ். இருப்பதாக அவர் (ராகுல்) கருதுகிறார்.

தற்போதைய அரசியல் சூழ்நிலை பிரதமர் நரேந்திர மோடிக்கு சாதகமாக இருக்கிறது. 2019 மக்களவைத் தேர்தலில் மோடிக்கு ஆதரவாக மக்கள் வாக்களிப்பார்கள். அந்தத் தேர்தலிலும் அதிக இடங்களைக் கைப்பற்றி மிகப் பெரிய வெற்றியை பா.ஜ.க பெறும்.

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார் அவர்.

குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நிலை மற்றும் துறைகளை ஒதுக்கீடு செய்யும் நடைமுறைகளில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தேர்வில் வெற்றி பெற்ற பிறகு 3 மாதங்களுக்கு அளிக்கப்படும் அடிப்படை பயிற்சியில் எவ்வாறு ஒருவர் செயல்படுகிறார் என்பதைப் பொருத்து அவரை நியமிக்கலாமா? அல்லது வேறு பணி நிலையில் நியமிக்கலாமா? எனத் தீர்மானிக்கப்பட உள்ளது. இதுகுறித்து அனைத்து அமைச்சகங்களின் கருத்துகளையும் மத்திய அரசு கேட்டு வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து