முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் கமிஷன் விசாரணை: தமிழக அரசு உத்தரவு

புதன்கிழமை, 23 மே 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

100 நாள் போராட்டம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு முற்றிலும் தடை விதிக்கக் கோரியும், அந்த ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் தூத்துக்குடி, குமரரெட்டியாபுரம், திருவைகுண்டம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் கடந்த 100 நாட்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்றுமுன்தினம் இந்தப் போராட்டத்தின் 100-வது நாளையொட்டி பொதுமக்கள் பேரணியாகச் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட போவதாக அறிவித்திருந்தனர். இதையடுத்து, போராட்டத்தைக் கட்டுப்படுத்த திங்கள்கிழமையே தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் 144 தடை உத்தரவைப் பிறப்பித்து இருந்தார்.
இந்நிலையில், 144 தடை உத்தரவை மீறி நேற்று முன்தினம் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பனிமய மாதா கோயிலில் இருந்து பேரணியாகச் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது, பொதுமக்களை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 10-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகினர்.

அருணா ஜெகதீசன்...

இந்நிலையில், இதுகுறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தனி நபர் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது.,

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக் கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை 144 தடை உத்தரவை மீறி பல்லாயிரக்கணக்கான நபர்கள் நேற்றுமுன்தினம் முற்றுகையிட்டனர். இதைத்தொடர்ந்து ஏற்பட்ட சட்டம் ஒழுங்கு சம்பவங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்திட, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தனி நபர் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

144 தடை நீடிப்பு

இந்நிலையில், தூத்துக்குடியில் வரும் 25-ம் தேதி வரை 144 தடை உத்தரவை நீட்டித்து மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நேற்று மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. நேற்றும் அங்கு துப்பாக்கி சூடு நடைபெற்றதில் மேலும் ஒருவர் பலியானார். ஆர்ப்பாட்டக்காரர்கள் போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டனர். தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் மேலும் பதற்றம் நீடித்து வருகிறது.

இந்த சம்பவத்தை அடுத்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் மற்றும் போலீஸ் சூப்பிரெண்டு ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து