முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு : 94.5 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை - சிவகங்கை மாவட்டம் முதலிடத்தை பிடித்தது

புதன்கிழமை, 23 மே 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு தேர்வின் முடிவுகள் சென்னையில் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 94.5 சதவீதம் மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல பத்தாம் வகுப்பு தேர்விலும் மாணவர்களை விட மாணவியரே அதிகளவில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் பத்தாம் வகுப்புத்தேர்வுகள் கடந்த மார்ச் 16- ம் தேதி முதல் ஏப்ரல் 20-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை 10 லட்சத்து 1140 மாணவர்கள் எழுதியுள்ளனர். இதில் பள்ளி மாணவர்கள் மட்டும் 9 லட்சத்து 50 ஆயிரத்து 397 ஆகும். தேர்வு எழுதிய மாணவியர் 4 லட்சத்து 76 ஆயிரத்து 57 பேர், மாணவர்கள் எண்ணிக்கை 4 லடசத்து 74 ஆயிரத்து 340 ஆகும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் சென்னையில் நேற்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது. தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தேர்வு முடிவுகளை வெளியிட்டார். அப்போது அவர் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் அமைச்சர் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.

தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள், மனம் தளராமல் அடுத்து வரும் துணைத்தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் தெரிந்து கொண்டனர். செல்போன்கள் வழியாகவும் மாணவர்கள் தேர்வு முடிவை அறிந்து மகிழ்ச்சியடைந்தனர்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.5 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். இதில் 96.4 சதவீதம் பேர் மாணவியர், 92.5 சதவீதம் பேர் மாணவர்கள், மாணவர்களை விட மாணவியர் 3.9 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்று வழக்கம் போல் சாதனை படைத்துள்ளனர். இதில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு மேல்நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 584 ஆகும். இந்த தேர்வில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் 98.50 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று தமிழகத்திலேயே முதலிடம் பிடித்துள்ளனர். 98.38 சதவீதம் தேர்ச்சி பெற்று ஈரோடு மாவட்ட மாணவர்கள் இரண்டாம் இடத்தில் வந்துள்ளனர். 98.26 சதவீதம் என்ற அடிப்படையில் விருதுநகர் மாவட்ட மாணவர்கள் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

இத்தேர்வில் பாடவாரியாகவும் மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். மொழிப்பாடத்தில் 96.42 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆங்கிலத்தில் 96.50 சதவீதமும் கணிதத்தில் 96.18 சதவீதமும் அறிவியலில் 98.47 சதவீதமும் சமூக அறிவியலில் 96.75 சதவீதம் மாணவர்களும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். அரசு பள்ளிகள் 91.35 சதவீத தேர்ச்சியும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 94.36 சதவீத தேர்ச்சியும், மெட்ரிக் பள்ளிகள் 98.79 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளன.

சிவகங்கை முதலிடம்

சிவகங்கை, ஈரோடு, விருதுநகர் மாவட்டங்கள் முதல் 3 இடங்களை பிடித்துள்ளன. இதில் சிவகங்கை மாவட்டம் 98.5% தேர்ச்சியுடன் முதலிடம் பிடித்துள்ளது. ஈரோடு மாவட்டம் 98.38% தேர்ச்சியுடன் 2-வது இடமும், விருதுநகர் மாவட்டம் 98.26% தேர்ச்சியுடன் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் 98.07% தேர்ச்சியுடன் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது. ராமநாத புரம் மாவட்டம் 97.94% தேர்ச்சியுடன் 5-வது இடத்தைப் பிடித்துள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வை 186 சிறைகைதிகளும் எழுதியுள்ளனர். இதில் 76 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய 4433 மாற்றுத்திறனாளிகளில் 3944 தேர்ச்சி பெற்றனர்.2 லட்சத்து 6 ஆயிரத்து 796 மாணவர்கள் 500-க்கு 401 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். 9 ஆயிரத்து 402 பேர் 481க்கும் மேல் பெற்றுள்ளனர். 451லிருந்து 480க்குள் 56 ஆயிரத்து 837 பேரும், 426லிருந்து 450க்குள் 64 ஆயிரத்து 144 பேரும், 401லிருந்து 425க்கு 76 ஆயிரத்து 413 பேரும் மதிப்பெண் பெற்றுள்னர்.

28-ம் தேதி தற்காலிக மதிப்பெண்

28-ம் தேதி முதல் பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளி தலைமையாசிரியர்கள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வுமைய தலைமையாசிரியர்கள் வழியாகவும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம். 28-ம் தேதி முதல் www.dge.tn.nic.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விடைத்தாள்களின் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 24-ம் தேதி முதல் 26-ம் தேதி மாலை 5.45 மணி வரை பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளி வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வுமையம் வழியாகவும் விண்ணப்பிக்க வேண்டும்துணைப் பொதுத்தேர்வு ஜூன் 28-ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை குறித்து விரைவில் தனியே அறிவிப்பு வெளியிடப்படும். தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் மறுதேர்வு எழுதி, இந்த கல்வி ஆண்டில் மேல்படிப்பில் சேரலாம் என்று அரசுத்தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து