முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூத்துக்குடியில் சகஜநிலை திரும்புகிறது

வெள்ளிக்கிழமை, 25 மே 2018      தமிழகம்
Image Unavailable

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக வன்முறை சம்பவங்களால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடியில் தற்போது மெல்ல மெல்ல அமைதி திரும்புகிறது. கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன. பஸ்கள் ஓடின.

வன்முறை சம்பவங்கள்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி நடந்த 100-வது நாள் போராட்டத்தில் வன்முறை சம்பவங்கள் வெடித்தன. 144 தடை உத்தரவை மீறி கலெக்டர் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால் போலீசார் துப்பாக்கிசூடு நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். தூத்துக்குடியில் நடந்த வன்முறை சம்பவங்களை அடுத்து பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தது. 144 தடை உத்தரவும் நேற்று வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. சிறிய வாகனங்கள் கூட ஓடாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணிக்காக வெளிமாவட்டங்களில் இருந்து சுமார் 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டனர். கமாண்டோ படையினரும் முக்கிய இடங்களில் எல்லாம் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் நகரின் முக்கிய வீதிகளில் ரோந்து வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அமைதி திரும்ப அரசு நடவடிக்கை
தூத்துக்குடியில் அமைதி திரும்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டது. போராட்டக்காரர்களின் கோரிக்கை படி மாவட்ட கலெக்டரும், போலீஸ் சூப்பிரண்டும் மாற்றப்பட்டு உடனடியாக புதிய கலெக்டரும், புதிய போலீஸ் சூப்பிரண்டும் பதவியேற்றனர். ஸ்டெர்லைட் ஆலையை மூட மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில் தமிழக அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருந்தார். மேலும் தூத்துக்குடி வன்முறை சம்பவத்திற்கு சில அரசியல் தலைவர்களும், சமூக விரோதிகளுமே காரணம் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். இந்த விவகாரம் தொடர்பான விளக்கத்தையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்திருந்தார். இந்நிலையில் இந்த ஆலைக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்தது. மேலும் இந்த ஆலை மூடப்படுவதாகவும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்தது. இந்த ஆலை மூடப்படுவதாக மாவட்ட கலெக்டரும் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் புதிய கலெக்டர் சந்தீப் நந்தூரி பதவியேற்றதும் தூத்துக்குடியில் அமைதியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்தினார். மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறி மக்களுக்கு நம்பிக்கையை ஊட்டினார். பொதுமக்களுக்கு பால், குடிநீர், காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவும் புதிய கலெக்டர் ஏற்பாடு செய்தார். தூத்துக்குடி காய்கறி மார்க்கெட் 2 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து காய்கறிகளை வாங்கி சென்றனர். மார்க்கெட்டுக்கு புதிய காய்கறிகளும் வரத்தொடங்கின. சிறு, சிறு உணவகங்களும் திறக்கப்பட்டன. அரசு மருத்துவமனை எதிரில் உள்ள அம்மா உணவகம் நேற்று திறக்கப்பட்டது.

பால் விநியோகம்
குடியிருப்பு பகுதிகளுக்கு வாகனங்கள் மூலம் பால் கொண்டு செல்லப்பட்டு வழக்கம் போல் விநியோகம் வழங்கப்பட்டது. பெட்ரோல் நிலையங்களும் திறக்கப்பட்டன. புறநகர் பகுதிகளான புதுக்கோட்டை, முத்தையாபுரம், ஸ்பிக் நகர், வாகைகுளம், ஒட்டப்பிடாரம் குறுக்கு சாலை ஆகிய இடங்களில் கடைகள் திறக்கப்பட்டன. ஸ்பிக், தெர்மல் உள்ளிட்ட ஆலைகளுக்கு வரும் லாரிகள் சில நாட்களாக நிறுத்தப்பட்டிருந்தன. அந்த லாரிகள் தற்போது தொழிற்சாலைக்கு வரத் தொடங்கியுள்ளன. துறைமுக பணிகளும் முழுமையாக தொடங்கின.

சகஜ நிலை திரும்புகிறது
இப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் மெல்ல மெல்ல சகஜ நிலை திரும்பி வருகிறது. நேற்று காலை 10 மணிக்கு மேல் தூத்துக்குடியில் இருந்து பஸ்கள் ஓடத் தொடங்கின. டெப்போக்களில் இருந்து பஸ்கள் அனைத்தும் பஸ்  நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து முதலில் நெல்லைக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. அதை தொடர்ந்து மதுரை, நாகர்கோவில் உள்ளிட்ட மற்ற ஊர்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டன. தூத்துக்குடியில் அமைதியை ஏற்படுத்துவதற்கான சிறப்பு அதிகாரியான வேளாண்மை துறை முதன்மை செயலாளர் ஹகன்தீப்சிங் பேடி அங்கு முகாமிட்டு மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களை பார்த்து ஆறுதல் கூறினார். போக்குவரத்து துறை இணை செயலாளர் டேவிதார் தூத்துக்குடியில் முகாமிட்டு பஸ்களை இயக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். போக்குவரத்து விரைவில் சீரடைந்து விடும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். மொத்தத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது இயல்பு நிலை மெல்ல மெல்ல திரும்பிக் கொண்டிருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து