முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில மொழித்திறன் பயிற்சி - கலெக்டர் தகவல்

வெள்ளிக்கிழமை, 25 மே 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் சதக் தஸ்தகீர் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் பள்ளிக்கல்வித் துறையின் சார்பாக அரசு ஆரம்ப பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ஆங்கில மொழித்திறன் பயிற்சி வழங்கிட ஏதுவாக சம்பந்தப்பட்ட பள்ளிகளில் பணிபுரியும்  ஆசிரியர்களுக்கான சிறப்பு ஆங்கில பயிற்சியினை கலெக்டர் முனைவர் நடராஜன் துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:- இந்திய அளவில் வளர்ந்து வரும் மாவட்டங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 115 மாவட்டங்களில் ராமநாதபுரம் மாவட்டமும் ஒன்றாகும்.  அதனடிப்படையில் நமது மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.  குறிப்பாக மாணவ, மாணவியர்களின் கல்வி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.  அந்த வகையில் மாணவ, மாணவியர்களின் கல்வி வளர்ச்சியினை மதிப்பீடு செய்திடும் வகையில் தேசிய மதிப்பீட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இந்த ஆய்வில் மாணவர்களுக்கு கணக்கு பாடம் மற்றும் மொழிப்பாடங்கள் (தமிழ் ஃ ஆங்கிலம்) ஆகியவற்றில் தேர்வு நடத்தி கல்வி வளர்ச்சி மதிப்பீடு செய்யப்படுகிறது. 
 அதனடிப்படையில் மாணவ, மாணவியர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் பிழையில்லாமல் எழுதிடவும், வாசித்திடவும் தெரிந்திருப்பது அவசியமாகும்.  அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் கல்வி கற்கும் மாணவ, மாணவியர்கள் ஆங்கில மொழியில் பாடங்களை வாசித்திடவும், எழுதிடவும் சற்று சிரமப்படுகின்றனர். இதன் விளைவாக கல்லூரிகளில் ஆங்கில வழியில் பாடங்கள் கற்பதற்கும், வேலைக்காக நேர்முகத் தேர்வுகளில் கலந்து கொள்வதற்கும் சிரமப்படுவதோடு, தாழ்வு மனப்பான்மை போன்ற மனச்சிக்கலுக்கும் ஆளாகின்றனர்.  இத்தகைய சூழ்நிலைகளை தவிர்த்திடும் வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ஆங்கில மொழியில் வாசிப்பு பயிற்சி, எழுத்து பயிற்சி மற்றும் உச்சரிப்பு பயிற்சி ஆகியவை வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது. 
 ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 928 அரசு ஆரம்ப பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.  மாணாக்கர்களுக்கு பயிற்சி வழங்கிட ஏதுவாக சம்பந்தப்பட்ட அரசு ஆரம்ப பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறையின் சார்பாக தனியார் நிறுவனத்தின் ஒருங்கிணைப்போடு இப்பயிற்சி வழங்கப்படுகிறது.  இப்பயிற்சியினை ஆசிரியர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொண்டு தங்களது பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு சிறப்பான முறையில் பயிற்சி வழங்கி அவர்களது ஆங்கில மொழித்திறனை உயர்த்திட உறுதுணை புரிய வேண்டும். இவ்வாறு பேசினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.முருகன், நிறுவனத்தின் ஆலோசகர் எஸ்.கோமதி, சதக் ஆசிரியர் பயிற்சி பள்ளியின் முதல்வர் முனைவர்.சோமசுந்தரம் உள்பட அரசு அலுவலர்கள், அரசு ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து