முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யாவில் உலகின் முதல் மிதக்கும் அணுமின்நிலையம்

சனிக்கிழமை, 26 மே 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை, ரஷ்ய அரசு நிறுவனமான ரொசாட்டம் உலகின் முதல் மிதக்கும் அணு மின் உற்பத்தி நிலையத்தை வடிவமைத்து அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ரொசாட்டம் நிறுவனம்தான், கூடங்குளம் அணு மின் நிலையத்தை நிர்வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ரஷ்ய விஞ்ஞானியான மிக்கெய்ல் லோமோனோசவ் நினைவாக அகடமிக் லோமோனோசவ் என்று இந்த மிதவை அணு மின் உற்பத்தி நிலையத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. மனிதர்கள் கால் பதிக்கவே சிரமங்களைச் சந்திக்க வேண்டியுள்ள சவால் நிறைந்த இடங்களுக்கு மின்சாரம் சப்ளை செய்வதற்கும், போக்குவரத்து கட்டமைப்பு மற்றும் புவியியல் அமைப்பு போன்றவை குறித்து கேள்வி எழுப்ப இயலாத சூழல்களிலும் பயன்படுத்த இது ஏற்றது. விரிவாக்கப்பட்ட கடற்பரப்புகளுக்கும், மின்சாரப் பற்றாக்குறை உள்ள இடங்களுக்கும், வலுவான மின்கட்டமைப்பு இல்லாத இடங்களுக்கும் கூட இந்த அணு மின் உற்பத்தி நிலையம் உகந்தது.

40 ஆண்டுகள் வரை செயல்படும்

தற்போது பூமிக்கடியில் இருந்து பெறும் நிலக்கரி, கச்சா எண்ணெய், எரிவாயு போன்றவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் மின்சாரத்துக்கான செலவில் - 40 சதவீதம் வரை, இந்த எரிபொருளைக் கொண்டு வந்து சேர்ப்பதற்காக செலவிடப்படுகிறது. அதோடு, பயணம் செல்ல சிரமமான இடங்களாக இருந்தால், அங்கு இந்த உற்பத்திச் செலவு அதிகரிக்கிறது. மாறாக ‘அளவில் சிறிது - எடையில் குறைவு - ஒரே விலை’ போன்ற அம்சங்கள் கொண்ட மிதக்கும் அணு மின் உற்பத்தி நிலையங்களை பல இடங்களில் அமைப்பதன் மூலம் பல சிரமங்களைத் தவிர்க்கலாம். இந்த சிறிய வகை அணு உலைகள் தொடர்ந்து 3 முதல் 5 ஆண்டுகள் வரை இடைவேளையின்றி செயல்படக் கூடியவை. அதனால், மின் உற்பத்திக்கான செலவு மிகவும் குறைவாகவே இருக்கும்.

இந்த மிதக்கும் அணு மின் உற்பத்தி நிலையத்தில் கே.எல்.டி.-40சி வகையிலான 2 அணு உலைகள் இடம்பெற்றுள்ளன. இவை ஒவ்வொன்றும், தலா 50 மெகாவாட் திறன் கொண்டவையாகும். இந்த புது உலைகள் முந்தைய உலைகளை விட அளவில் சிறிதாக இருந்தாலும், திறன் கணிசமாகவே அதிகரித்திருக்கும். இவற்றைச் சுமக்கும் கப்பல் 144 மீட்டர் நீளமும், 30 மீட்டர் அகலமும் கொண்டது. மேலும் 21,000 டன் தண்ணீரை இடம் பெயர்க்கும் திறன் கொண்டது.

இந்த மிதக்கும் மின் உற்பத்தி நிலையம், 40 ஆண்டுகள் வரை செயல்படக் கூடியது. அதை மேலும் அதிகரித்து, 50 ஆண்டுகள் வரை கூட பயன்படுத்தலாம். அந்த ஆயுள் முடிவில், இதைத் தனியாக இழுத்துச் சென்று, உடைத்து, அதில் உள்ள அணுக் கழிவுகளை மறு சுழற்சி செய்யலாம். இதற்கான தனி கிடங்கு அமைந்துள்ள இடத்துக்கு இந்த மின்நிலையம் இழுத்துச் செல்லப்படும் என்பதால், அதன் அணுக்கதிர் எச்சங்கள் பின்தங்கிவிடும் என்ற அச்சம் தேவையில்லை.

50 ஆயிரம் பேருக்கு மின்சப்ளை

தற்போது ரஷ்யத் துறைமுக நகரான மர்மேந்ஸ்க்-ல் எரிபொருள் நிரப்புவதற்காக நிறுத்தப்பட்டிருக்கும் இந்த மிதவை அணு மின் நிலையம், எரிபொருள் நிரப்பப்பட்டபின், ரஷ்யாவின் கிழக்கு எல்லையில் உள்ள சுக்காட்கா பகுதியின் பெவெக் நகருக்கு இழுத்துச் செல்லப்படும் பயணத்தின் சராசரி வேகம் - மூன்றரை முதல் நான்கரை கடல் மைல்கள் வரை இருக்கும்.இதைக் கடற்கரையில் நிறுவ தேவையான அனைத்துக் கட்டுமானப் பணிகளும் தற்போது பெவெக்-ல் நடைபெற்று வருகிறது. இந்த மின் நிலையத்தை கடற்கரையில் நிரந்தரமாக நிறுத்தி வைக்கவும், அதன் மின் உற்பத்தித் தொடங்கி… அதைத் தொடரவும், மின் விநியோகத்தை முன்னெடுக்கவும் தேவையான கட்டுமானப் பணிகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்பின், அங்குள்ள மின் கட்டமைப்பில் இம்மின் நிலையம் இணைக்கப்படும். இந்த இணைப்புப் பணி முடிந்து 2019-ல் மின் உற்பத்தி தொடங்கும்போது - உலகில் செயல்படும் நிலையில் உள்ள ஒரே மிதவை அணு மின் உற்பத்தி நிலையம் என்ற பெயரைப் பெறுவதுடன், உலக வரைபடத்தின் வடகோடியில் அமைந்துள்ள அணு மின் நிலையமாகவும் லோமோனோசவ் மாறும்.தற்போது நிலக்கரி கொண்டு அனல் மின் உற்பத்தி செய்யும் ஒரு நிலையத்துக்கும், மற்றொரு பழைய அணுமின் உற்பத்தி நிலையமான பிலிப்பினோவுக்கும் மாற்றாக இது அமையும். இந்த புதிய அணு மின் நிலையத்தால் அங்குள்ள 50,000 மக்கள் மின்சார சப்ளை பெற்று பயன் பெறுவர். இது மட்டுமின்றி, ஆண்டுக்கு பல ஆயிரம் டன் கரியமில வாயு உற்பத்தியாவதைத் தடுத்து, ஆர்டிக் துருவப் பகுதியில் கார்பன் படிவைக் குறைக்கவும் இது உதவும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து