முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.எஸ்.ஐ. முன்னாள் தலைவருக்கு பாகிஸ்தான் ராணுவம் சம்மன்

ஞாயிற்றுக்கிழமை, 27 மே 2018      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ முன்னாள் தலைவர் ஆசாத் துரானி, விசாரணைக்கு இன்று நேரில் ஆஜராகுமாறு அந்த நாட்டு ராணுவம் சம்மன் அனுப்பியுள்ளது.

கடந்த 1990 முதல் 1992 வரை பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ தலைவராக லெப்டினென்ட் ஜெனரல் ஆசாத் துரானி பணியாற்றினார். இதே போல இந்திய உளவுத் துறையான ரா அமைப்பின் தலைவராக லெப்டினென்ட் ஜெனரல் (ஓய்வு) ஏ.எஸ்.துலாட் 1999 முதல் 2000 வரை பதவி வகித்தார்.
ஆசாத் துரானி, துலாட், இந்திய பத்திரிகையாளர் ஆதித்யா சின்ஹா ஆகியோர் இணைந்து, தி ஸ்பை கிரானிக்கில்ஸ்: ரா, ஐஎஸ்ஐ அண்ட் தி இல்லுஷன் ஆப் பீஸ் என்ற பெயரில் புத்தகம் எழுதியுள்ளனர்.

பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் ஒசாமா பின்லேடனை அமெரிக்க கடற்படையினர் சுட்டுக் கொல்ல மேற்கொண்ட நடவடிக்கைகள் அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானிக்கு முன்கூட்டியே தெரியும் என்று ஆசாத் துரானி புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் பிரச்சினை, குல்பூஷண் ஜாதவ் விவகாரம் உட்பட பல்வேறு முக்கிய நிகழ்வுகள் குறித்து ரா, ஐ.எஸ்.ஐ முன்னாள் தலைவர்கள் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளனர். இதனிடையே பாகிஸ்தான் ராணுவம், புத்தகம் குறித்து விசாரிக்க தொடங்கியுள்ளது. பாகிஸ்தான் ராணுவ தலைமையகத்தில் இன்று நேரில் ஆஜராகி துரானி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

ரா முன்னாள் தலைவர் துலாட்டுடன் இணைந்து புத்தகம் எழுத பாகிஸ்தான் அரசிடம் துரானி முன்கூட்டியே அனுமதி பெற்றாரா என்பது குறித்து பதில் அளிக்கும்படி பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சருக்கும் அந்த நாட்டு ராணுவம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து