முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பரமக்குடி பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் கலெக்டர் முனைவர் நடராஜன் நேரில் ஆய்வு செய்தார்

வியாழக்கிழமை, 31 மே 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் முனைவர் நடராஜன் நேரில் ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி  ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த துறைகளின் சார்பாக  மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளை கலெக்டர் முனைவர் நடராஜன் நேரில் சென்று பார்வையிட்டார். உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்க செய்வதில் நீர்வளம், மண்வளம், மண்ணின் தன்மை ஆகியன முதன்மையான பங்கு வகிக்கின்றது.  பயிர் சாகுபடியில் உயர் விளைச்சல் பெற்றிட தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து மற்றும் நுண்ணூட்டச்சத்துகள் உள்ளிட்ட 20 வகையான ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகின்றன. மேற்கூறிய சத்துக்கள் சரியான அளவில் இருந்தால் மட்டுமே, நல்ல மகசூல் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது. ஒரு பயிருக்கான உரத்தேவையை கணக்கிடுவதற்கு மண்ணில் உள்ள சத்துக்களின் அளவு விபரம் அறிந்திட மண்பரிசோதனை செய்வது மிக மிக அவசியமாகும்.  மண்பரிசோதனை மூலம்  நிலத்தில் உள்ள சத்துக்களின் அளவு அறிந்து உரமிட மண்வள அட்டை திட்டம் மூலம் தற்போது விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றது.
ராமநாதபுரம் மாவட்டத்தில்  இத்திட்டத்தின் கீழ் முதல் சுழற்சியில் மொத்தம் 2.05 இலட்சம் விவசாயிகளுக்கு மண் வள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.  இரண்டாம் சுழற்சியில் இதுவரை 75686  விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.  2018-19ம் ஆண்டு நிறைவில் மொத்தம் 1.117 இலட்சம் விவசாயிகளுக்கு இரண்டாம் சுழற்சியில் மண்வள அட்டை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மண்வள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள உர சிபாரிசின்படி பயிருக்குத் தேவையான அளவு உரம் இடுவதால் உரச்செலவு குறைவதோடு மண்வளமும் பாதுகாக்கப்படுகிறது.  இதனால் விவசாயிகளின் வருமானமும் அதிகரிக்கும்.  எனவே, வரும் காலங்களில் மண்வள அட்டையின் சிபாரிசின் அடிப்படையில் மட்டுமே, விவசாயிகள் விற்பனையாளர்களிடமிருந்து விற்பனை முனைய கருவி  மூலம் பெற்றிட திட்டமிடப்பட்டு வருகிறது.
  அதனடிப்படையில் பரமக்குடியில் உள்ள மண் பரிசோதனை நிலையத்திற்கு ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் நேரிடையாக சென்று,  மண்பரிசோதனை நிலையத்தில் மண்ணின் உப்பின் நிலை, அமில கார நிலை, மண்ணின் சத்துகள் அளவிடும் கருவிகள், மண்நயம், சுண்ணாம்பு சத்து  மற்றும் நுண்நூட்ட சத்துகளை அளவிடும் முறைகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். அதன்பின்னர் பரமக்குடி வட்டம் மேலப்பெருங்கரை நீர்வடிப்பகுதியில் ரூ.3.00 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஊரணி ஆழப்படுத்தப்பட்டு வரும் பணிகளையும், ரூ.2.5 லட்சம் மதிப்பில் புதியதாக ஆழ்துளை கிணறு  அமைத்திட மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளையும் நேரில் சென்று பார்வையிட்டார். பின்பு சூடியூர் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதித் திட்டத்தின் கீழ் ரூ.1.56 லட்சம் மதிப்பில்  மாபெரும் மரக்கன்றுகள் நடும் பணியினையும், பாரத பிரதமரின் வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் ரூ1.70 லட்சம் மதிப்பீட்டில் பயனாளி மூலம் கட்டப்பட்டு வரும் வீட்டினையும் நேரில் சென்று பார்வையிட்டார்.  அதன் பின்பு நெல்மடூர் கிராமத்தில் ரூ. 6.00 லட்சம் மதிப்பில் ஊரணி ஆழப்படுத்தப்பட்டு வரும் பணிகளையும நேரில் சென்று ஆய்வு செய்ததோடு, 12 விவசாயிகளுக்கு  மொத்தம் ரூ.24,000 மதிப்பிலான  10 கைத்தெளிப்பான்கள் மற்றும் 2 தார்ப்பாய்களை மாவட்ட கலெக்டர்  வழங்கினார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ராஜா, வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) சேக் அப்துல்லா, வேளாண் அலுவலர் அம்பேத்குமார் , பரமக்குடி வட்டார வளாச்சி அலுவலர் வீரராகவன் உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து