முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் எடப்பாடி ஆட்சியை எதிர்க்கட்சிகள் விமர்சிப்பது ஏன்? சட்டசபையில் அமைச்சர் ஜெயகுமார் சொன்ன குட்டிக்கதை

வெள்ளிக்கிழமை, 1 ஜூன் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: அ.தி.மு.க. ஆட்சியின் வளர்ச்சியையும் வேகத்தை கண்டு பொறாமையால் எதிர்க்கட்சியில் போட்டி சட்டசபை நடத்துகிறார்கள் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொன்ன குட்டிக்கதை சொல்லி அமைச்சர் ஜெயகுமார் விளக்கினார்.
 
இதுகுறித்து தமிழக சட்டசபையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் சொன்ன குட்டிக்கதை வருமாறு:-
மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த 12.02.2003 அன்று இதே அவையிலே, எதிர்க்கட்சிகள், குறிப்பாக அன்றைக்கு எந்தளவிற்கு அரசையெல்லாம் விமர்சனம் செய்ததையெல்லாம் குறித்து அண்ணா வாழ்க்கையிலிருந்து அவர் சொன்ன நிகழ்ச்சி, இந்த அவையிலே சொல்லியிருக்கின்றார்கள். அதை நான் இப்பொழுது சொல்கிறேன். அன்று ஜெயலலிதா சொன்னது, நம் மீது சிலர் ஆத்திரத்தை காட்டுகிறார்கள், கொட்டுகிறார்கள். சட்டசபையிலும் சரி, வெளியிலும் சரி, நம்மைக் கண்டால் அப்படி  அவர்களுக்கு ஆத்திரம் வருவானேன்? யோசித்துப் பார்த்தேன், விளங்கவில்லை.

அண்ணா வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்ச்சி எனக்கு இன்றைக்கு இந்தக் கேள்விக்கு விடையைத் தந்தது அண்ணா திருச்சியிலிருந்து ஈரோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார். வழியிலே ஓர் ஊரில் அரசியல் கூட்டம் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. யாரோ ஒரு அரசியல்வாதி, அண்ணாவை திட்டிக் கொண்டிருந்தார். அண்ணாவுடன் காரில் சென்று கொண்டிருந்த நண்பர் ஒருவர் அண்ணா நீங்கள் இந்த அரசியல் வாதியைப் பற்றி எதுவும் திட்டிப் பேசியதில்லையே, இவர் ஏன் உங்களைப் பற்றி இப்படி தாறுமாறாகப் பேசவேண்டும். இவ்வாறு அந்த நண்பர் கேட்டதற்கு, அண்ணா எந்த பதிலும் சொல்லவில்லை.

கொஞ்சதூரம் பயணம் தொடர்ந்தது. முன்னால் ஒரு மாட்டு வண்டி சென்று கொண்டிருந்தது. அண்ணாவின் கார் அந்த மாட்டு வண்டியை முந்திச்சென்றது. அப்படி முந்திச் செல்லும்போது, வண்டிக்காரன் சத்தம் போட்டான். காரில் போகிறவர்களை திட்டினான். அப்பொழுது அண்ணா, முன்னால் கேள்வி கேட்ட நண்பரிடம் சொன்னார். இந்த வண்டிக்காரன் ஏன் நம்மைத் திட்டினான்? நமது ஓட்டுநர் தவறு செய்தாரா? நாம்தான் ஏதாவது கேலியாக பேசினோமா? என்று அண்ணா கேட்டார். நண்பர்சொன்னார், இல்லையே, அண்ணா, நாம் ஒன்றும் தவறு செய்யவில்லையே. நம் ஓட்டுநரும் முறையாகத்தான் வண்டியை ஓட்டி வந்தார். அப்புறம் ஏன் அந்த வண்டிக்காரன் நம்மைத்திட்டினான் என்பதுதான் விளங்கவில்லை என்று நண்பர் சொன்னதற்கு, அண்ணா பதில்சொன்னாராம். நாம் வண்டியைத் தாண்டி வந்துவிட்டோம், நமது வேகத்திற்கு ஈடுகொடுக்க இயலாமையால், வண்டிக்காரன் நம்மைத் திட்டினான். அப்படித்தான், நமது வளர்ச்சியின் வேகத்திற்கு ஈடுகொடுத்து வரஇயலாமல் பின்தங்கி விட்டவர்கள், பொறாமையால் நம்மை திட்டி பேசுகிறார்கள் என்று அண்ணா சொன்னார்.

இன்றைக்கு நம் மீது சிலருக்கு ஆத்திரம். ஏன் இந்த ஆத்திரம் என்றால், அண்ணா அன்று சொன்ன பதிலைத் தான் நான் இன்று சொல்ல வேண்டியிருக்கிறது. நமது வளர்ச்சியை தாங்க முடியாதவர்கள், நமது புகழைக் கண்டு பொறாமைப்படுபவர்கள், அவர்களைத்தாண்டி நாம் வளர்ந்துவிட்டோம் என்ற ஆத்திரத்தில் கண்டபடி பேசுகிறார்கள். அவர்களுடைய ஒவ்வொரு வார்த்தையும் அவர்களுடைய தோல்வியின் வெளிப்பாடாகவே வந்து கொண்டிருப்பதை இந்த நாட்டு மக்கள் நன்றாகவே அறிவார்கள். அரசின் மீது எந்தக் குற்றமும், குறையும் சொல்லாத, எந்தவித பொருளும் இல்லாததால், மக்கள் கவனத்தை ஏதேனும் ஒரு வழியில் ஈர்க்க வேண்டுமென்று வெளிநடப்பு செய்து, மாதிரி சட்டசபை, அது, இது என்று பொழுதைப்  போக்கிக்கொள்வதிலேயே காலத்தை கழிப்பவர்களை நிச்சயமாக தொகுதி மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள். இவ்வாறு அமைச்சர் ஜெயகுமார் குட்டிக்கதை மூலம் எதிர்க்கட்சிகளை சாடினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து