முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 264 புதிய பாடப்பிரிவுகள் அறிமுகம் சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 1 ஜூன் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: இந்த ஆண்டு கலை, அறிவியல் கல்லூரிகளில் 264 புதிய பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்படும் என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ரூ.152 கோடியே...
கடந்த ஏழு வருடங்களில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் 56 அரசு, பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 4 அரசு பொறியியல் கல்லூரிகள், 19 அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. அம்மாவின் வழியில் செயல்படும் அம்மாவின் அரசு உயர்கல்வித் துறையில் இந்த ஆண்டு செயல்படுத்த உள்ள புதிய திட்டங்களை அறிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழ்நாட்டிலுள்ள 41 பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அனைத்தும் நடப்பு கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக மாற்றப்படும். இதற்கென ஆண்டிற்கு 152 கோடியே 20 லட்சம் ரூபாய் தொடரும் செலவினம் ஆகும்.

683 உதவிப் பேராசிரியர்கள்
2011-12 -ம் கல்வியாண்டு முதல் 2017-18-ம் கல்வியாண்டு வரை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1232 புதிய பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. 2018-19-ம் கல்வியாண்டில் 264 புதிய பாடப் பிரிவுகள் (68 இளங்கலை, 60 முதுகலை, 136 ஆராய்ச்சி) அறிமுகப்படுத்தப்படும். இப்பாடப் பிரிவுகளை கையாளுவதற்கு 683 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும். இதற்கென அரசுக்கு தொடரும் செலவினமாக 68 கோடியே 46 லட்சம் ரூபாய் ஏற்படும். இப்பாடப் பிரிவுகளின் தேவைக்கென 324 வகுப்பறை கட்டடங்கள், 50 ஆய்வகங்கள் மற்றும் பிற உட்கட்டமைப்பு வசதிகள் 62 கோடியே 75 லட்சம் ரூபாயில் அமைக்கப்படும்.

கல்லூரி விடுதிகள்
தமிழ்நாட்டில் பர்கூர், கோயம்புத்தூர், காரைக்குடி, சேலம், திருநெல்வேலி மற்றும் வேலூரில் உள்ள 6 அரசு பொறியியல் கல்லூரிகளிலுள்ள அரசு விடுதிகளில் தலா 150 மாணாக்கர்கள் தங்குவதற்கு ஏதுவாக 3 நபர்கள் தங்கும் வசதியுள்ள 50 அறைகள் கொண்ட விடுதிகள் 37 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து