முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீன ராணுவ மறுகட்டமைப்பை உன்னிப்பாக இந்தியா கவனித்து வருகிறது:நிர்மலா சீதாராமன்

சனிக்கிழமை, 9 ஜூன் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: சீன ராணுவ மறுகட்டமைப்பை இந்தியா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

சீன கல்விக்கான சென்னை மையத்தின் 10-ஆம் ஆண்டைக் குறிக்கும் வகையில் சீனாவின் ராணுவ, அரசியல், சமூக, வர்த்தக மாற்றங்கள் மீதான சர்வதேச கருத்தரங்கம் சென்னையில்  நடத்தப்பட்டது.

இதில் கலந்து கொண்டு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது :-பசிபிக் கமாண்ட்' என்ற அமெரிக்க ராணுவத் திட்டத்தின் பெயரை, இந்தோ-பசிபிக் கமாண்ட்' என அமெரிக்கா பெயர் மாற்றம் செய்துள்ளது. இப்பெயர் மாற்றத்தைத் தொடர்ந்து தனது கிழக்கு நோக்கிய கொள்கையை விரிவுபடுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக வியத்நாம், குவாம் வரை கடற்படையை நிலைநிறுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்த விரிவுபடுத்தும் திட்டம் காரணமாக, சீன ராணுவ மறுகட்டமைப்பையும் இந்தியா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.

சீனா தனது ராணுவத்தில் மிகப் பெரிய மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, ராணுவத்தில் வீரர்களின் எண்ணிக்கையைக் குறைத்து, தொழில்நுட்பத்தை மேம்படுத்தி வருகிறது. கடந்த 2017-ஆம் ஆண்டு வரை ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை 3 லட்சம் வரை சீனா குறைத்துள்ளது. சீனாவின் மக்கள் விடுதலை பாதுகாப்புப் படை, கப்பல் படை, விமானப் படை, ராக்கெட் தொழில்நுட்பங்களில் மிகப் பெரிய மாற்றங்களை சீனா மேற்கொண்டு வருகிறது.

இந்தச் சூழலில், அண்மையில் பிரதமர் நரேந்திர மோடிக்கும், சீன அதிபர்  ஜின்பிங் இருவருக்கும் இடையே நடைபெற்ற திட்டமிடப்படாத பேச்சுவார்த்தையில், இரு நாட்டு உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதுவரை இல்லாத வகையில், அடுத்தடுத்த நாள்களில் இரண்டு முறை இரு நாட்டுத் தலைவர்களும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இப்பேச்சுவார்த்தையின்போது இரு நாடுகளும் பல்வேறு திட்டங்களை இணைந்து மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக, நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் அவ்வப்போது பேசிக்கொள்ளும் வகையில் இரு நாடுகளுக்கு இடையே -ஹாட்லைன்- இணைப்புக் கொடுக்கும் திட்டத்தை விரைந்து நடைமுறைப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய-சீன எல்லையில் சீன மக்கள் விடுதலை பாதுகாப்புப் படையின் அத்துமீறல்களுக்கு இரு நாட்டு உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு இந்தப் பேச்சுவார்த்தைக்கு சிறந்த வாய்ப்பாக அமையும் என்று பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து